மாவட்டத்தில் அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கூடத்தில் சேர்க்க நடவடிக்கை கலெக்டர் ஆஷாஅஜீத் தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் 6 முதல் 18 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் கூறினார்.;

Update:2023-08-11 00:45 IST


சிவகங்கை மாவட்டத்தில் 6 முதல் 18 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

சிவகங்கை மாவட்டத்தில் 2023-2024-ம் கல்வி ஆண்டில் 6 முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவரையும் 100 சதவீதம் பள்ளியில் சேர்ப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதற்காக மாவட்ட அளவிலான குழு ஒன்றும், வட்டார அளவிலான குழு ஒன்றும், பள்ளி அளவிலான குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

மாவட்ட அளவிலான குழுவிற்கு கலெக்டர் தலைவராகவும், உறுப்பினர்களாக போலீஸ் சூப்பிரண்டு, ஊரக வளர்ச்சி மொபைல் திட்ட இயக்குனர், மாவட்ட வருவாய் அலுவலர், மகளிர் திட்டத்தின் இயக்குனர், கோட்டாட்சியர், மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர், மாவட்ட கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அலுவலர், மாவட்ட சமூக அலுவலர், ஊராட்சிகள் உதவி இயக்குனர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை அலுவலர் ஆகியோரும் ஒருங்கிணைப்பாளராக முதன்மை கல்வி அலுவலர் நியமிக்கப்பட்டனர்.

மீண்டும் பள்ளியில் சேர்க்க

கூட்டத்தில் கலெக்டர் ஆஷா அஜீத் பேசியதாவது:-

ஒவ்வொரு நாளும் பள்ளிக்கு வராத குழந்தைகளின் பெற்றோர்களுக்கு குறுந்தகவல் அனுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இடைநிற்றல் குழந்தைகளை கண்காணித்து மீண்டும் பள்ளியில் சேர்க்க பள்ளி அளவிலான குழுக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 வாரங்களுக்கு ஒருமுறை பள்ளி அளவிலான குழுவினர் கூடி செயல்பாடுகளை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் பள்ளி அளவில் ஆரம்பக்கல்வி பதிவேடு முறையாக பராமரிக்கப்படுவதை வட்டார கல்வி அலுவலர் உறுதி செய்ய வேண்டும். இடை நிறுத்தப்பட்ட குழந்தைகள் மற்றும் இடைநிறுத்தலுக்கு வாய்ப்பு உள்ள குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு கொண்டு வருவதற்கு தேவையான வழிகாட்டுதலையும், உதவிகளையும் வட்டார அளவிலான குழுக்கள் செய்ய வேண்டும். அத்துடன் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வட்டார அளவிலான கூட்டங்களை கூட்ட வேண்டும். மேலும் மாவட்டத்தில் பள்ளி செல்லாத இடைநின்ற குழந்தைகள் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்பு உள்ள குழந்தைகளையும் மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலர்கள் மேற்பார்வையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அனிதா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்