பாரம்பரிய உடையணிந்து வந்த கலெக்டர், அரசு ஊழியர்கள்
சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பாரம்பரிய உடையணிந்து தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.;
நாகர்கோவில்:
சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பாரம்பரிய உடையணிந்து தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர்.
பாரம்பரிய உடையணிந்த கலெக்டர்
75-வது சுதந்திர தினத்தையொட்டி அமுத பெருவிழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஜூலை 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை குமரி மாவட்டம் முழுவதும் இந்த நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 5-வது நாளான நேற்று குமரி மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கதர் மற்றும் கைத்தறியால் ஆன பாரம்பரிய உடைகளான வேட்டி- சட்டை, சேலை அணிந்து வந்தனர். அவர்கள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் அரவிந்த் தலைமையில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை ஒருசேர பாடினர்.
இந்த நிகழ்ச்சியையொட்டி கலெக்டர் அரவிந்த், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வீராசாமி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி ஹரிதாஸ், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி நாகராஜன், சமூக பாதுகாப்புத்திட்ட துணை கலெக்டர் திருப்பதி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஜான் ஜெகத் பிரைட், மகளிர் திட்ட அதிகாரி மைக்கில் பெர்னாண்டோ, தாசில்தார்கள் சேகர், கண்ணன், சுப்பிரமணியம், முருகன் மற்றும் அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள், வாகன ஓட்டுனர்கள் என பெரும்பாலானோர் பாரம்பரிய உடைகளான வேட்டி- சட்டை மற்றும் சேலை அணிந்து வந்திருந்தனர்.
இந்த நிகழ்ச்சியையொட்டி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கைத்தறி கண்காட்சியும் நடந்தது.
போலீஸ் சூப்பிரண்டு
இதேபோல் நேற்று காலை 11 மணியளவில் குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்தார். அமைச்சு பணியாளர்களும், போலீசாரும் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தினை பாடி அமுத விழாவை கொண்டாடினர்.