சிப்காட் தொழிற்பேட்டையில் வேளாண்மை சார்ந்தசிறு, குறு தொழிற்சாலைகள் தொடங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

Update: 2023-04-28 19:00 GMT

தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டையில் வேளாண்மை சார்ந்த சிறு, குறு தொழிற்சாலைகள் தொடங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

காவிரி உபரிநீர் திட்டம்

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டஅரங்கில் நேற்று நடைபெற்றது. கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் வனப்பகுதிகளையொட்டி உள்ள விவசாய நிலங்களில் மயில்கள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே மயில்கள் விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க காவிரி ஆற்றின் உபரி நீரை மாவட்டத்தில் உள்ள ஏரிகளின் நிரப்பும் திட்டத்தை விரைவாக செயல்படுத்த வேண்டும்.

முன்னுரிமை

தர்மபுரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் வழங்க கேழ்வரகு கர்நாடக மாநிலத்தில் இருந்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதை தவிர்த்து தர்மபுரி மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் கேழ்வரகு கொள்முதலை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பட்டா மாற்றம் செய்யும்போது பல்வேறு பிழைகள், குளறுபடிகள் ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

எனவே இத்தகைய பிழைகளை முழுமையாக தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தர்மபுரியில் தொடங்கப்பட்டுள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் வேளாண்மை சார்ந்த சிறு, குறு தொழில்கள் தொடங்க முன்னுரிமை வழங்க வேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினார்கள்.

போதிய அளவில் இருப்பு

இந்த கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசியதாவது:-

மாவட்டத்தில் வேளாண் பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான விதைகள் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாய சாகுபடிக்கு தேவையான உயிர் உரங்கள் தேவையான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

உறுதி செய்ய வேண்டும்

வேளாண்மை துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு சரியாக எடுத்துச் சென்று அவர்களுடைய உற்பத்தி மற்றும் வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வேளாண்மை துறை சார்ந்த அனைத்து நிலை அலுவலர்களும் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இந்த கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இதில் வேளாண்மை இணை இயக்குனர் விஜயா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குனர் மாலினி உள்பட துறை சார்ந்த அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்