சாலை வசதி இல்லாத இடத்தில் இயங்குவதற்கு பட்டாசு ஆலைக்கு உரிமம் வழங்கப்பட்டது குறித்து விசாரணை-கலெக்டர் சாந்தி பேட்டி

Update: 2023-03-16 18:45 GMT

பாப்பாரப்பட்டி:

சாலை வசதி இல்லாத இடத்தில் பட்டாசு ஆலை இயங்க உரிமம் வழங்கப்பட்டது குறித்து விசாரனை நடத்தப்படும் என்று கலெக்டர் சாந்தி கூறினார்.

வெடி விபத்து

பாப்பாரப்பட்டி அருகே நாகதாசம்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி முனியம்மாள், பழனியம்மாள் ஆகியோர் பலியாகினர். மேலும் சிவலிங்கம் என்ற பெண் படுகாயம் அடைந்தார். இந்தநிலையில் பட்டாசு ஆலை இருந்த இடத்துக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் செல்லவில்லை. அந்த பகுதிக்கு செல்ல குறுகிய பாதையே உள்ளதால் தீயணைப்பு, மீட்பு வாகனங்கள் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இதனிடையே சம்பவம் நடந்த பகுதியில் மாவட்ட கலெக்டர் சாந்தி ஆய்வு செய்தார். அப்போது அவர்நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, கூறியதாவது:-

விசாரணை

நாகதாசம்பட்டியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலை தலைமுறை தலைமுறையாக உரிமம் பெறப்பட்டு இயங்கி வந்தது. வெடி விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கவனக்குறைவால் வெடி விபத்து ஏற்பட்டதா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தீயணைப்பு மற்றும் மீட்பு வாகனங்கள் செல்ல சாலை வசதி இல்லாத இடத்தில் பட்டாசு ஆலை இயங்க உரிமம் அளிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து கலெக்டர் சாந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன், முன்னாள் எம்.எல்.ஏ. தடங்கம் சுப்பிரமணி ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்