திருமலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

Update: 2022-12-16 18:45 GMT

திருமலைப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் ஸ்ரேயாசிங் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கலெக்டர் ஆய்வு

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட திருமலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, அங்கன்வாடி மையம், அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்த கலெக்டர் பள்ளி மாணவ, மாணவிகளின் கற்றல் திறனை புத்தகங்களை வாசிக்க செய்து பரிசோதித்தார். மாணவ, மாணவிகள் ஆங்கில பாடத்தினை சரளமாக வாசிப்பதை பார்வையிட்டு அதன் பொருள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் நன்றாக ஆங்கிலத்தில் வாசித்த மாணவ, மாணவிகளை பாராட்டி நோட்டு, புத்தகங்கள், பென்சில் உள்ளிட்டவற்றை பரிசாக வழங்கினார்.

அங்கன்வாடி மையம்

இதனைத்தொடர்ந்து, திருமலைப்பட்டி அங்கன்வாடி மையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுகள் விவரங்களை கேட்டறிந்து, அட்டவணைப்படி குழந்தைகளுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றதா? என அங்கன்வாடி பணியாளர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும் திருமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் அரையாண்டு தேர்வுகள் நடைபெறுவதையொட்டி கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சத்துணவு கூடத்தில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு குறித்தும், மாணவ, மாணவிகள் தினசரி வருகை குறித்தும் தலைமை ஆசிரியரிடம் விரிவாக கேட்டறிந்தார்.

ஆரம்ப சுகாதார நிலையம்

முன்னதாக திருமலைப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் உள்நோயாளிகள், புறநோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும், சிறு நோய்களுக்கான சிகிச்சைகள், பேறுகால சிகிச்சைகள், ஆய்வக வசதிகள் மற்றும் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள், சர்க்கரை நோய் சிகிச்சை மற்றும் கண் பரிசோதனை சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் ஆண், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், புறநோயாளிகளின் வருகை, குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட தாய்மார்களின் விவரம் குறித்தும் கேட்டறிந்தார். நோயாளிகளுக்கான படுக்கை வசதி, மருத்துவர் அறை, கர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனை அறை, ரத்த பரிசோதனை அறை, முதலுதவி மற்றும் ஊசி போடும் அறை, மருந்து வழங்கும் அறை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்