நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கலெக்டரின் முகாம் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலக சுற்றுச்சுவரின் இடுக்கு பகுதியில் சிறிய உடும்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 1½ அடி நீளம் கொண்ட அந்த உடும்பை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் பையில் போட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். வனத்துறையினர் அந்த உடும்பை வனப்பகுதியில் கொண்டு விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.