பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் 3 லட்சத்து 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் 3 லட்சத்து 70 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன கலெக்டர் ஸ்ரேயா சிங் தகவல்

Update: 2022-09-24 18:45 GMT

நாமக்கல் வனக்கோட்டத்தில் பசுமை தமிழகம் இயக்கத்தின் கீழ் 3 லட்சத்து 70 ஆயிரம் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரேயா சிங் தெரிவித்துள்ளார்.

பசுமை இயக்கம்

தமிழக காடு மற்றும் மரங்களின் அடர்த்தியை மாநிலத்தின் நிலப்பரப்பில் 33 சதவீதமாக உயர்த்துவதற்காக தமிழ்நாடு பசுமை இயக்கத்தை அரசு ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு பசுமை இயக்கத்தின் கீழ் பல்வேறு துறைகள், பொது மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடனும், மக்களின் முழு அளவிலான பங்களிப்புடனும் பல தரப்பட்ட நம் மண் சார்ந்த மரங்களை நடுவதற்கு பெரும் மரம் நடவு திட்டம் ஒன்று அடுத்த 10 ஆண்டு காலத்தில் செயல்படுத்தப்படும் என்று 2021-22-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கு இணங்க, நாட்டுமர வகைகள் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளையும், இயற்கை பேரிடர்களை எதிர்கொள்ளவும், பேரிடர்களில் இருந்து மக்களை பாதுகாக்கும் திறன் கொண்டதாகவும் திகழ்வதால், அதிக அளவிலான நாட்டு மரங்கள் நடுவது மற்றும் ஊக்குவிப்பது பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.

3.70 லட்சம் மரக்கன்றுகள்

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் மரக்கன்றுகளை நட்டு பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் கல்பூங்காவில் வனத்துறை சார்பில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் மரக்கன்றினை நட்டு வைத்தார். தொடர்ந்து பலா, சப்போட்டா, கொய்யா, இலந்தை, சீத்தா உள்பட பல்வேறு நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டன.

நாமக்கல் வனக்கோட்டத்தில் பசுமை தமிழகம் இயக்கம் 2022-2023 திட்டத்தின் கீழ் 3,70,000 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட உள்ளது. இந்த பணியில் விடுப்பட்டு போகும் அல்லது வளராமல் போகும் மரக்கன்றுகளை கருத்தில் கொண்டு கூடுதலாக 30 ஆயிரம் மரக்கன்று நாற்றுகள் சேர்த்து மொத்தம் 4 லட்சத்து 7 ஆயிரம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளன. விரைவில் இவை மாவட்டம் முழுவதும் நடப்பட உள்ளன என கலெக்டர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, வன விரிவாக்க அலுவலர் அல்லிராஜ், வனச்சரக அலுவலர்கள் பெருமாள், ரவிச்சந்திரன், முருகவேல், திருச்செந்தூரான், சக்தி கணேஷ் உள்பட வனவர்கள், வனக் காப்பாளர்கள், வனக் காவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்