ஓய்வுபெற்ற அரசு ஊழியரிடம் கந்துவட்டி வசூல்
விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்ற ஊழியரிடம் கந்துவட்டி வசூலித்த தந்தை- மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.;
விழுப்புரம் அருகே உள்ள கண்டமானடி அரசு போக்கு வரத்து ஊழியர் நகரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 66). இவர் விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர் ஆவார். இவர் கடந்த 2014-ல் இருந்து 2022 வரை விழுப்புரம் குபேர தெருவை சேர்ந்த ராஜேந்திரகுமார் நாஹர் (58), அவரது மகன் மகாவீர்சந்த் நாஹர் (29) ஆகியோரிடம் சிறுக, சிறுக ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் என்று சில தவணைகளாக ரூ.25 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார். வாங்கிய தொகைக்காக அவர், ஒரு பத்திரம் எழுதிக்கொடுத்து வெற்று காசோலை, ஸ்டாம்ப் பேப்பர் உள்ளிட்டவற்றை கொடுத்துள்ளார்.
கந்துவட்டி வசூல்
இந்த சூழலில் கடந்த சில மாதத்திற்கு முன்பு கந்தசாமி, தான் வாங்கிய கடன் தொகைக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.37 லட்சத்தை அவர்கள் இருவரிடமும் கட்டியுள்ளார். பின்னர் அவர், தான் கொடுத்த மேற்கண்ட ஆவணங்களை திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இருவரும் இன்னும் ரூ.4 லட்சம் கொடுத்தால்தான் ஆவணங்களை தர முடியும் என்று கூறியதாக தெரிகிறது. இதுகுறித்து கந்தசாமி, விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ராஜேந்திரகுமார் நாஹர், மகாவீர்சந்த் நாஹர் ஆகியோர் மீதும் கந்துவட்டி கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.