இடிந்து விழும் நிலையில் வேளாண்மை கிடங்கு

கொள்ளிடத்தில் இடிந்து விழும் நிலையில் வேளாண்மை கிடங்கு காணப்படுகிறது. இதை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2023-04-19 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடத்தில் இடிந்து விழும் நிலையில் வேளாண்மை கிடங்கு காணப்படுகிறது. இதை இடித்து விட்டு புதிதாக கட்டப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

வேளாண்மை கிடங்கு சேதம்

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்துக்கு அருகே வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வந்தது. இங்கு உள்ள வேளாண்மை கிடங்கில் உரங்கள், பூச்சி மருந்துகள், பயிர் நுண்ணூட்டங்கள், விதை நெல் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் பாதுகாக்கப்பட்டு, விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.

40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த வேளாண் கிடங்கு உரிய முறையில் பராமரிக்கப்படாமல், தற்போது மிகவும் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள். கிடங்கின் மேற்கூரையில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. சுவர்களில் விரிசல் காணப்படுகிறது.

அலுவலகம் இடமாற்றம்

இடிந்து விழும் நிலையில் உள்ள வேளாண் கிடங்கையொட்டி உள்ள கழிவறையும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம், கிடங்கு ஆகியவை மிகவும் சேதம் அடைந்த நிலையில் உள்ளதால், வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக புத்தூரில் உள்ள தனியாருக்கு சொந்தமான வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

விவசாயிகள் எதிர்பார்ப்பு

கிடங்கு ஆபத்தான நிலையில் இருந்தாலும் வேளாண் இடு பொருட்கள் மட்டும் அங்கேயே இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் வேளாண் இடுபொருட்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் அவை சேதம் அடையும் ஆபத்து உள்ளதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

மிகவும் சேதம் அடைந்து ஆபத்தான நிலையில் உள்ள கொள்ளிடம் வேளாண்மை கிடங்கை உடனடியாக இடித்து அகற்றிவிட்டு புதிய கிடங்கு கட்டி, அனைத்து வேளாண் இடு பொருட்களையும் உரிய முறையில் பாதுகாக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்