பிரதமரின் உணவு பதப்படுத்தப்படும்குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்
பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் றுவனங்கள் ஒழுங்குப்படுத்தும் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒழுங்குபடுத்தும் திட்டம்
தொழில் வளம் பெருகுவதற்கான இணக்க சூழலை மேம்படுத்துவதில் அதன் மூலம் கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உறுதி கொண்டுள்ள தமிழக அரசு, சுய தொழில் புரிவதில் ஆர்வம் கொண்டோர் உதவி பெறத்தக்க மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று, மத்திய அரசின் 60 சதவீத நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் உணவு பதப்படுத்துதல் குறுந்தொழில் நிறுவனங்கள ஒழுங்கு படுத்தும் திட்டம் ஆகும்.
இத்திட்டத்தின் கீழ் உணவுப்பதப்படுத்தல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல் உள்ளிட்ட தொழில்களை தொடங்கவும், மேம்படுத்தவுமான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கவும், வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. நிதி நிறுவனங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவிக்கு ஏற்பாடு செய்யப்படுவதுடன், தொழில் நடத்திட தேவையான சட்டப்பூர்வ உரிமங்கள் மற்றும் தரச்சான்றிதழ்கள் பெறவும், சந்தைப்படுத்துதலை மேம்படுத்த தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன.
மானியம்
இத்திட்டத்தின் கீழ் புதியதாக தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர் மற்றும் ஏற்கனவே உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ளோர் மற்றும் குறு நிறுவனங்கள், சுய உதவிக்கு குழுவினர், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் ஆகியோர் பயன்பெறலாம். ரூ.1 கோடி வரையிலான திட்டத்தொகை கொண்ட உணவுப்பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெறத்தகுதி பெற்றவை ஆகும்.
திட்ட தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தனது பங்காகச் செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லாக் கடனாக வழங்கப்படும். அரசு 30 சதவீதம் மானியம், அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை வழங்கும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். எனவே, ஆர்வமுள்ள தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் விண்ணப்பிக்கலாம்.. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.