கோவை: எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகத்தில் வருமானவரித்துறை திடீர் சோதனை - கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

கோவை கோட்டைமேட்டில் உள்ள எஸ்.டி.பி.ஐ. கட்சி அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு திடீர் சோதனை நடத்தினார்கள்.;

Update: 2022-09-14 02:16 GMT

கோவை,

கோவை கோட்டைமேடு ஈஸ்வரன் கோவில் வீதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கோவை மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று இரவு வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். மாவட்ட தலைவர் முஸ்தபா மற்றும் கட்சி நிர்வாகிகள் அங்கு இருந்தனர்.

கட்சி நிதி வசூல் உள்ளிட்ட கணக்கு ஆவணங்களை வருமான ஆய்வு செய்துள்ளனர். அங்குள்ள ஒரு கம்ப்யூட்டரில் பதிவாகி உள்ள தகவலையும் ஆய்வு செய்துள்ளனர். வெளிநாடுகளில் இருந்து நிதி பரிமாற்றம் செய்யப்பட்டதா? என்றும் விவரங்களை வருமானவரித்துறை கேட்டுள்ளனர். மேலும் சமீபத்தில் நடந்த பண பரிமாற்றம் குறித்தும் விசாரணை நடத்தினர்.

இரவு 8.30 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை பல மணிநேரம் நீடித்தது. இந்த சோதனையையொட்டி பாதுகாப்புக்காக அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வருமானவரித்துறை சோதனை தொடர்பான தகவல் அறிந்ததும், எஸ்.டி.பி.ஐ. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கட்சி அலுவலகம் முன்பு கூடி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள். நேரம் செல்ல செல்ல ஏராளமானவர்கள் குவிந்ததால் போலீசாரும் கூடுதலாக குவிக்கப்பட்டனர். சிறிய சாலை பகுதி என்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.இந்த சோதனை இரவு 11 மணிக்கு நிறைவு பெற்றது.

கட்சி நிர்வாகிகள் வருமானவரித்துறை அலுவலகத்துக்கு வந்து விவரங்களை தெரிவிக்குமாறு அதிகாரிகள் சம்மன் கொடுத்துவிட்டு சென்றனர். சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்