தி.மு.க எம்.பி.கனிமொழி சந்திப்புக்கு பின் நீக்கம் ;கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா கண்ணீர் மல்க பேட்டி...
விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் தனியார் பஸ் உரிமையாளர் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது.;
கோவை
கோவை, கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்சில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் ஓட்டுநர் ஷர்மிளா பிரபலமாகி வருகிறார்.
இந்த நிலையில் தி.மு.க எம்.பி.கனிமொழி, ஷர்மிளா இயக்கிய பஸ்சில் இன்று பயணம் மேற்கொண்டார்.
முதல் பெண் பேருந்து ஓட்டுநரான ஷர்மிளாவை நேரில் சந்தித்துக் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் ஷர்மிளா ஓட்டும் பேருந்தில் கனிமொழி பயணம் மேற்கொண்டார். பேருந்தில் பயணித்த பெண்களிடமும் உரையாடினார். காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து பீளமேடு பகுதி வரை பயணித்த கனிமொழி, ஷர்மிளாவிற்கு கை கடிகாரத்தை பரிசளித்து கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். திமுக எம்.பி கனிமொழி சந்திப்பு குறித்து பேசிய பெண் பேருந்து ஓட்டுனர் ஷர்மிளா, "பேருந்து ஓட்டும் போது அவருடன் அதிகமாக பேச முடியாததால் பீளமேட்டில் இறங்கி தன்னுடன் பேசினார். என்ன உதவி வேண்டுமானாலும் தாங்கள் செய்து தருவதாகவும் கனிமொழி மேடம் தெரிவித்தார். தன்னை கட்டி அணைத்து பரிசு அளித்தார். இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது" என்று கூறினார் ஷர்மிளா.
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக பஸ் ஓட்டுநராக பணியாற்றி வந்த ஷர்மிளாவை பேருந்தின் உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார். திமுக எம்.பி. கனிமொழி பயணித்தபோது பயணச்சீட்டு கொடுப்பதில் ஏற்பட்ட தகராறில் ஷர்மிளா பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் தனியார் பஸ் உரிமையாளர் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஷர்மிளாவை தனது பணியை ராஜினாமா செய்து உள்ளார்.
இதுகுறித்து கண்ணீர் மல்க அவர் கூறியதாவது;-
தான் விளம்பரத்திற்காக பேருந்தில் ஆள்களை ஏற்றுவதாக பேருந்தின் உரிமையாளர் பேசியதாக வேதனையுடன் தெரிவித்தவர், திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டோர் பயணச்சீட்டு எடுத்துதான் பயணித்தனர்.
கனிமொழி பேருந்தில் பயணித்தபோது அவருடன் வந்தவர்களிடம் நடத்துநர் கடுமையாக நடந்ததை கண்டித்தேன் என தெரிவித்தார்.