கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்: மேலும் 4 பேரை கைது செய்து என்.ஐ.ஏ. நடவடிக்கை
கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவை, சென்னை உள்ளிட்ட 21 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.;
சென்னை,
கோவை உக்கடத்தில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே 2022 அக். 23-ம் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டிவந்த உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த ஜமேஷா முபின் (25) என்பவர் உயிரிழந்தார். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜமேஷா முபினுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், மக்கள் கூடும் இடத்தில் கார் சிலிண்டரை வெடிக்கச் செய்து உயிரிழப்புகளை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டியிருப்பதும் தெரியவந்தது. பின்னர், இந்த வழக்கு என்.ஐ.ஏ. வசம் ஒப்படைக்கப்பட்டது.
என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி, இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரை கைது செய்துள்ளது. மேலும், கோவையில் இயங்கி வந்த அரபிக் மொழியை கற்றுக் கொடுக்கும் தனியார் அரபிக் கல்லூரியிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். சோதனையில், அக்கல்லூரியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பான ஆவணங்கள், அந்த அமைப்புக்கு ஆட்களை மூளைச்சலவை செய்து அனுப்புவது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. அதனடிப்படையில், ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு ஆதரவு விவகாரம் தொடர்பாக என்.ஐ.ஏ. சென்னை பிரிவு அதிகாரிகள் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தனியாக வழக்கு பதிந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கின் தொடர்ச்சியாக கோவை, சென்னை, நெல்லை, மதுரை, திருச்சி, கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் 21 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பல்வேறு பயங்கரவாத செயல்கள் உள்பட பல்வேறு சட்ட விரோத மற்றும் தேச விரோத செயல்கள் தொடர்புடைய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக 4 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று கைது செய்துள்ளனர்.