இறப்பிலும் இணைபிரியா தம்பதி: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் சாவு

கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் பரிதாபமாக உயிரிழந்தார். இருவரது உடல்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.;

Update: 2023-02-24 20:46 GMT

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே உள்ள இன்னம்பூரை சேர்ந்தவர் கலியமூர்த்தி(வயது 85). இவர், கொத்தனார் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சரோஜா(75). இவர்களுக்கு இரண்டு மகள்கள். இருவருக்கும் திருமணம் முடிந்து அவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக கலியமூர்த்தி, உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கலியமூர்த்தி, உடல்நலக்குறைவால் இறந்தார்.

கணவர் இறந்தார்

கணவர் இறந்த தகவல் அறிந்ததும் சரோஜா செய்வதறியாது திகைத்தார். இத்தனை ஆண்டுகளாக தன்னோடு பயணித்தவர் தன்னை விட்டு விட்டு போய்விட்டாரே. இனிமேல் தனக்கு யார் ஆதரவு? என்று சரோஜா மனம் வெதும்பினார். கணவர் இறந்த நிமிடத்தில் இருந்து சரோஜா பித்து பிடித்ததுபோல் மாறினார்.

இந்த நிலையில் கலியமூர்த்தியின் இறுதிச் சடங்குகளுக்கான வேலைகள் நடந்து கொண்டு இருந்தது. அப்போது சரோஜா தனது கணவரின் அருகில் சென்ற அவரது உடலை பார்த்தவாறு அமர்ந்து இருந்தார்.

மனைவியும் சாவு

அப்போது திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்த உறவினர்கள் சரோஜா முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை எழுப்ப முயற்சித்தனர்.

ஆனால் சரோஜாவும் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் கலியமூர்த்தியின் இறப்புக்கு துக்கம் விசாரிக்க வந்த உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அவரது மனைவியும் இறந்து விட்டதை அறிந்து இருவரின் உடல்களையும் பார்த்து கதறி அழுதனர்.

ஒரே இடத்தில் அடக்கம்

இதனையடுத்து கணவன்-மனைவி இருவரது உடல்களையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய முடிவெடுத்த உறவினர்கள் அதன்படி இருவரது உடல்களையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்