கொங்கணாபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்கொப்பரை தேங்காய் விற்பனை அதிகரிப்புரூ.7 லட்சத்துக்கு ஏலம் போனது

கொங்கணாபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் விற்பனை அதிகரித்தது. ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போனது.

Update: 2023-10-10 20:05 GMT

எடப்பாடி

கொங்கணாபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் விற்பனை அதிகரித்தது. ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போனது.

கொப்பரை தேங்காய்

சங்ககிரி- ஓமலூர் பிரதான சாலையில் கொங்கணாபுரம் அருகே கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று பொது ஏலம் மூலம் கொப்பரை தேங்காய் விற்பனை நடந்தது. இதில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்து இருந்த சுமார் 350 மூட்டை கொப்பரை தேங்காய் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் முன்னிலையில் பொதுஏலம் விடப்பட்டது.

ஏலத்தில் பெருந்துறை, காங்கேயம், திருப்பூர், தாராபுரம், முத்தூர், வெள்ளகோவில் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் ஏலம் கூறி கொப்பரை தேங்காய்களை மொத்த கொள்முதல் செய்தனர்.

பொது ஏலத்தில் கொப்பரை தேங்காய் குவிண்டால் ஒன்று ரூ.8,040 வரை விற்பனையானது. நாள் முழுவதும் நடந்த ஏலத்தின் மூலம் சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான கொப்பரை தேங்காய் விற்பனையானது.

பருத்தி

இதேபோல் எடப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடைபெற்ற பொது ஏலத்தில் 223 மூட்டை பருத்தி விற்பனையானது. ஏலத்தில் பருத்தி குவிண்டால் ஒன்று ரூ.6,659 முதல் ரூ.7,252 வரை விலை போனது. பொது ஏலத்தில் ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 198 மதிப்பெண் பருத்தி விற்பனை நடைபெற்றது.

ஓமலூர்

ஓமலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு  119 மூட்டை கொப்பரை தேங்காய் ஏலத்துக்கு வந்தது. இதில் 17 விவசாயிகள் விற்பனைக்காக கொப்பரை தேங்காயை கொண்டு வந்தனர். இதில் வியாபாரிகள் கலந்து கொண்டு தேங்காய்களை ஏலம் எடுத்தனர். அதிகபட்ச விலையாக 75.20 ரூபாயும், குறைந்தபட்ச விலையாக ரூ.58.75-க்கும் தேங்காய் ஏலம் போனது. இதில் சராசரி விலையாக ரூ.73.25-க்கு ஏலம் போனது. நேற்று மட்டும் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 569 ரூபாய்க்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது என்று வேளாண் விற்பனை கூட கண்காணிப்பாளர் ஆனந்தி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், அறுவடை காலத்தில் விலை வீழ்ச்சியாக இருப்பின் ஒழுங்குமுறை விற்பனை மையங்களில் உள்ள கிடங்குகளில் குவிண்டால் ஒன்றுக்கு, நாள் ஒன்றுக்கு 5 பைசா வீதம் குறைந்த வாடகையில் இருப்பு வைத்துக் கொள்ளலாம். வியாபாரிகள் நாள் ஒன்றுக்கு, குவிண்டால் 10 பைசா வாடகையில் இருப்பு வைத்து கொள்ளலாம். இருப்பு வைக்கும் விளைபொருட்களுக்கு அதன் மதிப்பில் 50 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை 5 சதவீத வட்டியில் பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. இதுவே வியாபாரிகளுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை 9 சதவீதம் வட்டியில் பொருளீட்டு கடன் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள், வியாபாரிகள் பயன்படுத்தி கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்