உடுமலை பகுதியில் தண்ணீர் பற்றாக்குறையால் தென்னை மரங்கள் கருகி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
அழிவின் விளிம்பில்
நீண்ட காலத்திற்கு நிலைத்து நின்று பலன் தரக்கூடிய நிலைப்பயிரான தென்னை விவசாயம் உடுமலை பகுதியில் பிரதான தொழிலாக உள்ளது.
விவசாயியோடு சேர்த்து எண்ணற்ற தொழிலாளர்களின் குடும்பத்தை காப்பாற்றி வந்த தென்னை விவசாயம் இன்று குற்றுயிரும் குலைஉயிருமாக அழிவின் விளிம்பில் உள்ளது.
கொப்பரை விலை வீழ்ச்சி, ஆட்கள் பற்றாக்குறை, பருவநிலை மாறுபாட்டால் நோய் தாக்குதல், பராமரிப்பு, இடுபொருட்கள் விலை உயர்வு, தேங்காய் மற்றும் இளநீருக்கு போதிய விலை இன்மை காரணமாக தேங்காய் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
விவசாயிகள் கண்ணீர்
ஒரு சிலர் தென்னை விவசாயத்தை கைவிட்டும் வருகின்றனர். இந்த நிலையில் வறட்சியும் தென்னை விவசாயிகளை கடுமையாக தாக்கி வருகிறது. பருவமழையும் பொய்த்து விட்ட நிலையில் நீராதாரங்கள் முற்றிலுமாக வற்றிப் போனது.
அதன் தாக்குதலில் இருந்து சமாளிக்க முடியாமல் தண்ணீரை விலைக்கு வாங்கி ஊற்றும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர்.
அதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தண்ணீரை விலைக்கு வாங்கி தென்னை மரங்களுக்கு ஊற்றி காப்பாற்றி வந்தனர்.
ஆனாலும் காற்று மற்றும் வெப்பத்தின் கோர தாண்டவத்திற்கு முன்பு விவசாயிகளின் முயற்சி வீணற்று போனது.கண்ணும் கருத்துமாக பிள்ளை போன்று பார்த்து பார்த்து வளர்த்த தென்னை மரங்கள் பலன் கொடுத்து வந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் துடித்து துடித்து மாண்டு போனது கண்டு விவசாயிகள் கண்ணீர் வடித்து வருகின்றனர்.
உரிய நிவாரணம்
ஒரு சில தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக அழிந்து விட்டது. இதனால் வாழ்வாதாரத்திற்காக மாற்றுத் தொழிலை நாடிச்செல்ல வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்றும் வகையில் உடுமலை பகுதியில் வறட்சியால் பட்டுப்போன தென்னை மரங்களை கணக்கீடு செய்து உரிய நிவாரணம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசு மற்றும் அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.