கடலோர காவல்படை வீரர் ரெயிலில் அடிபட்டு சாவு

தூத்துக்குடியில் கடலோர காவல்படை வீரர் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியானார்.;

Update: 2022-10-18 18:45 GMT

தூத்துக்குடியில் கடலோர காவல்படை வீரர் ரெயிலில் அடிபட்டு பரிதாபமாக இறந்தார்.

ரெயிலில் அடிபட்டு..

சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலையில் வந்து கொண்டு இருந்தது. தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதியில் ரெயில் வந்த போது, தண்டவாளத்தின் குறுக்கே வந்த நபர் மீது ரெயில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த அந்த நபர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ரெயில் என்ஜின் டிரைவர், தூத்துக்குடி ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் தூத்துக்குடி ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாகிருஷ்ணன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

கடலோர காவல்படை வீரர்

அப்போது, இறந்தவர் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகின. அதாவது, மேற்கு வங்காளம் மாநிலம் புருலியா பகுதியை சேர்ந்த பாகல் சந்திரா மாஜி மகன் பிஜாய்குமார் மாஜி (வயது 21). இவர் தூத்துக்குடி கடலோர காவல் படை வீரராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் கடலோர காவல்படையின் ஆதேஷ் என்ற ரோந்து கப்பலில் பணியில் இருந்தாா்.

பிஜாய்குமார் மாஜி யாருக்கும் தெரியாமல் நள்ளிரவில் கப்பலில் இருந்து இறங்கி உள்ளார். மேலும் அவர் வ.உ.சி. துறைமுகத்தை விட்டு வெளியில் வந்து உள்ளார். பின்னர் அங்கிருந்து சின்னகண்ணுபுரம் பகுதிக்கு சென்ற பிஜாய்குமார் மாஜி அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது.

தற்கொலை?

எனினும் பிஜாய்குமார் மாஜி பணிச்சுமை காரணமாக கப்பலில் இருந்து நைசாக வெளியேறி ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணங்களுக்காக வெளியில் வந்தவர் ரெயிலில் அடிபட்டு இறந்தாரா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிஜாய்குமார் மாஜி இறந்த சம்பவம் குறித்து, தூத்துக்குடி கடலோர காவல்படை அலுவலகம் மூலம் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்