கடலோர பாதுகாப்பு ஒத்திகை

கோட்டைப்பட்டினம், மணமேல்குடி கடலோர பகுதியில் சாகர் கவாச் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

Update: 2022-06-28 19:27 GMT

கடலோர பாதுகாப்பு ஒத்திகை

கடலோர பகுதியில் தீவிரவாத ஊடுருவலை தடுக்கும் விதமாக 6 மாதங்களுக்கு ஒரு முறை சாகர் கவாச் என்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும். அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், கடலோர பகுதியில் 2 நாட்கள் ஒத்திகை நடைபெறுகிறது. அந்த வகையில் நேற்று கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இந்த ஒத்திகையில், கடல் வழியே பயங்கரவாதிகள் ஊடுருவி வந்தால் அவர்களை எவ்வாறு தடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

படகுகளில் சோதனை

கடலோர பகுதிகளான கட்டுமாவடி, மும்பாலை, ஆதிப்பட்டினம், கோட்டைப்பட்டினம், பாலக்குடி, ஏம்பக்கோட்டை, அரசங்கரை ஆகிய 7 இடங்களில் சோதனை சாவடி அமைத்து அவ்வழியே வரும் வாகனங்களை சோதனை செய்து, அவர்கள் வாகனத்தின் பதிவு எண்களை பதிவு செய்த பின்னரே வாகனம் செல்ல அனுமதிக்கின்றனர். கடலோர காவல் குழுமத்தினர் தங்கள் ரோந்து படகின் மூலம் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வரும் படகுகளை சோதனை செய்கின்றனர்.

பின்னர் படகிற்கு பதிவெண் உள்ளதா மற்றும் மீனவர்களுக்கு அடையாள அட்டை உள்ளதா என்று சரிபார்த்த பின்னரே படகுகள் செல்ல அனுமதிக்கின்றனர். சந்தேகப்படும் படி யாரேனும் தென்பட்டால் உடனே தகவல் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்த ஒத்திகையில் காவல் துறையினர், கடலோர பாதுகாப்பு காவல் குழுமத்தினர், கடலோர காவல் படையினர், தீயணைப்பு துறையினர், வருவாய்த்துறையினர் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுகின்றனர். திடீரென கடலோர பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ள சம்பவத்தால் கடலோர பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டது.

மணமேல்குடி

மணமேல்குடி கிழக்கு கடற்கரை பகுதியில் சாகர் கவாச் என்ற பயங்கரவாத தடுப்பு ஒத்திகை நடந்தது. மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும இன்ஸ்பெக்டர் முத்துகண்ணு தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராமராஜன் மற்றும் போலீசார் ஊர் காவல் படையினர் இணைந்து கண்டனிவயல் சோதனை சாவடியில் சோதனை செய்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி வாகனத்தை முழுமையாக சோதனையிட்டனர். மேலும் மணமேல்குடி கோடியக்கரை பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். இதேபோல் மீனவ கிராமங்களான புதுக்குடி, பொன்னகரம், அந்தோணியார்புரம், வடக்கம்மாபட்டினம், மேலஸ்தானம் ஆகிய பகுதிகளுக்கு சென்ற போலீசார் மக்களிடம் கடத்தல் சம்பந்தமாகவும், பயங்கரவாத தடுப்பு சம்பந்தமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்த ஒத்திகையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்