கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 11-ந் தேதி தொடங்குகிறது
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இரண்டாம் நிலை காவலர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 11-ந் தேதி தொடங்குகிறது.;
இதுதொடர்பாக கடலூா் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால், தமிழ்நாடு காவல் துறையில் காலியாக உள்ள 3,552 இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணிக் காலியிடங்களுக்கு www.tnusrb.tn.gov.in என்ற தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய இணையதளம் மூலமாக வருகிற 15.8.2022 வரை விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் இத்தேர்விற்கு தயாராகும் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வாளர்கள் மற்றும் வேலை நாடுநர்கள் பயனடையும் வகையில், அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) முதல் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பு தினசரி திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை, காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடத்தப்பட உள்ளது.
முன்பதிவு
எனவே இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் இதுதொடர்பான விவரங்களை 04142 -290039 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். எனவே இப்பயிற்சி வகுப்புகளில் அரசு பணிக்கு தயாராகிவரும் கடலூர் மாவட்ட வேலைதேடும் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.