போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடக்கம்
வேலூரில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியது.;
மத்திய, மாநில அரசுகளின் போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாவட்டந்தோறும் நடத்துவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் வேலூர் முத்துரங்கம் அரசு கலைக்கல்லூரியில் ரெயில்வே தேர்வு வாரியம், மத்திய, மாநில அரசு பணியாளர் தேர்வாணையம், வங்கிப்பணிகள் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கின.
தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மலர் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குனர் பரமேஸ்வரி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து பேசினார்.
பயிற்சி வகுப்பில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 150 மாணவ-மாணவிகளுக்கு ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து தொடர்ந்து 100 நாட்கள் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் பல்வேறு துறைகளை சேர்ந்த பேராசிரியர்கள், வல்லுனர்களை கொண்டு வழங்கப்பட உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். முடிவில் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர் சீனிவாசன் நன்றி கூறினார்.