கொடைக்கானலில் அலை, அலையாய் தரை இறங்கிய மேககூட்டம்
கொடைக்கானலில் அலை, அலையாய் தரை இறங்கிய மேககூட்டங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் பகுதியில் தற்போது குளிர் சீசன் நிலவி வருகிறது. அதேநேரத்தில் பருவநிலை மாற்றம் காரணமாக அடிக்கடி மேக கூட்டங்கள் தரையிறங்குவது வாடிக்கையாகி விட்டது. கடந்த 2 நாட்களாக பகல் வேளையில் கடும் பனிமூட்டம் நிலவிய நிலையில், இன்று காலை முதல் நீண்ட நாட்களுக்கு பிறகு இயல்பான வெப்பம் நிலவியது.
அப்போது கொடைக்கானல் கோக்கர்ஸ் வால்க் பகுதியில் மேககூட்டங்கள் அலை, அலையாய் தரை இறங்கின. பார்ப்பதற்கு கடல் அலைகளை நினைவுப்படுத்துவது போல மேக கூட்டங்கள் காட்சி அளித்தன. இதைத்தொடர்ந்து சாலைகளிலும் கடும் பனிமூட்டம் நிலவியது. பிற்பகலில் லேசான சாரல் மலை தூறியது. மாலையில் கடும் குளிர் வாட்டியது. மாறி வரும் பருவநிலையை ஏராளமான சுற்றுலா பயணிகள் அனுபவித்து மகிழ்ந்ததுடன், நகர் பகுதியில் உள்ள சுற்றுலா இடங்களை கண்டுகளித்தனர்.