திருத்தணி அருகே பூட்டிய வீட்டில் துணிக்கடை ஊழியர் பிணமாக மீட்பு

திருத்தணி அருகே பூட்டிய வீட்டில் துணிக்கடை ஊழியர் பிணமாக மீட்கப்பட்டார்;

Update: 2023-07-24 09:29 GMT

துணி கடை ஊழியர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம் பட்டாபிராமபுரம் ஊராட்சி விநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பலராமன் (வயது 48). இவர் ஆவடியில் உள்ள ஒரு துணி கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஆனந்தி (40). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவன்- மனைவி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 19-ந்தேதி பலராமன் வழக்கம் போல் மனைவி ஆனந்தியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் கணவன் மீது கோபமடைந்த ஆனந்தி ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பள்ளியங்குப்பம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

துர்நாற்றம்

மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால், பலராமன் மனஉளைச்சலில் தினமும் அதிக அளவில் மது குடித்து வந்ததாக தெரிகிறது. கடந்த 2 நாட்களாக பலராமனின் வீடு திறக்கப்படவில்லை. மனைவியை பார்க்க பலராமன் சென்று இருக்கலாம் என்று அந்த பகுதி மக்கள் நினைத்தனர்.

இநத நிலையில் நேற்று முன்தினம் இரவு பலராமன் வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்தபோது அழுகிய நிலையில் பலராமன் இறந்து கிடந்தது தெரியவந்தது. பின்னர் சடலத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த திருத்தணி போலீசார், மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் பலராமன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மது போதையில் இறந்தாரா? என்ற கோணத்தில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்