அரசு பள்ளிகளில் எல்கேஜி ,யுகேஜி மூடல் : அன்புமணி ராமதாஸ் கண்டனம்
எல்கேஜி யுகேஜி வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூடுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.;
சென்னை,
கடந்த 2018ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி , யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட எல்கேஜி , யுகேஜி வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் மூடப்பட்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுகிறது. எல்கேஜி யுகேஜி வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூடுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்து பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;
தமிழ்நாட்டில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இதன் மூலம் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு வராமல் தனியார் பள்ளிகளுக்கு செல்ல அரசே வழிகாட்டுகிறது.
எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை நடத்துவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை சரி செய்து நடத்துவது தான் அரசின் பணி. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால் புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அதை விடுத்து மழலையர் வகுப்புகளை மூடுவது தவறு.மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் இட மாற்றம் செய்த போதே அவை மூடப்படும் என்ற செய்தி பரவியது. ஆனால், அப்போது அந்த செய்தியை மறுத்த பள்ளிக் கல்வித்துறை, இப்போது மூட ஆணையிட்டது ஏன்? என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும்.
மழலையர் வகுப்புகள் ஏழைக் குழந்தைகளுக்கு வரப்பிரசாதம். அவற்றை மூடி அடித்தட்டு மக்களின் கல்வி வாய்ப்பை பறிக்கக்கூடாது. மழலையர் வகுப்புகளை தொடர்ந்து நடத்தவும், அதற்காக பயிற்சி பெற்ற மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.