காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்ய எதிர்ப்பு: சிதம்பரத்தில் வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம்

சிதம்பரத்தில் காய்கறி மார்க்கெட் இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தினர்.

Update: 2022-06-17 17:00 GMT


சிதம்பரம்,


சிதம்பரம் மேலவீதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக அண்ணா காய்கறி மார்க்கெட் இயங்கி வருகிறது. இதற்கு பதிலாக நகராட்சி நிர்வாகம் சிதம்பரம் வடக்கு மெயின் ரோட்டில் உள்ள உழவர் சந்தை வளாகத்தில் புதிதாக காய்கறி மார்க்கெட் கட்டுவதற்கு முடிவு செய்தது. இதற்காக ரூ.5 கோடியே 77 லட்சத்தில் கட்டிடம் கட்ட முடிவு செய்து, அதற்கான பூமி பூஜை கடந்த 13-ந்தேதி நடந்தது. இதற்கு மேலவீதியில் இயங்கி வரும் சிதம்பரம் நகர அண்ணா மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் நலச்சங்கம் எதிர்ப்பு தெரிவித்ததுடன், தொடர்ந்து காய்கறி மார்க்கெட் மேலவீதியிலேயே இயங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி ஜூன் 17-ந்தேதி கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தது.

கடைகளை அடைத்து போராட்டம்

அதன்படி நேற்று சிதம்பரம் நகர அண்ணா மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் மற்றும் எஸ்.பி. கோவில் தெரு மார்க்கெட் வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் நலச்சங்க தலைவர் சிவக்குமார், துணை தலைவர் நாகராஜன் ஆகியோர் கூறுகையில், சிதம்பரம் நகர மைய பகுதியான மேலவீதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

இந்த மார்க்கெட்டை இடமாற்றம் செய்தால் வியாபாரிகள், பணியாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும் சிதம்பரம் நகர மக்கள், ஓட்டல் நடத்துவோர், கிராமப்புறங்களில் இருந்து வருபவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஆகவே மேலவீதியில் இயங்கும் காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்யக்கூடாது. மேலும் எங்களது கோரிக்கை குறித்து சிதம்பரம் வர்த்தகர் சங்கம் மூலம் வேளாண்துறை அமைச்சர், நகர்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் மற்றும் நகராட்சி ஆணையரை சந்தித்து முறையிட உள்ளோம் என்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்