போலி டாக்டர் நடத்திய கிளினிக்கிற்கு 'சீல்'
பேரணாம்பட்டு அருகே போலி டாக்டர் நடத்திய கிளினிக்கிற்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.;
பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி கிராமத்தில, ஆம்பூர் அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த பிரேம்சிங் (வயது 46) என்பவர் டாக்டருக்கு படிக்காமல் கடந்த 10 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வருவதாக வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கண்ணகிக்கு புகார் வந்தது. அதன்பேரில் நேற்று இரவு அவரது தலைமையில் குடியாத்தம் அரசு மருத்துவமனை டாக்டர் சதீஷ், திருப்பத்தூர் மருந்து ஆய்வாளர் சபரிநாதன், மற்றும் பேரணாம்பட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தேவபிரசாத் ஆகியோர் பத்தலப் பல்லி கிராமத்திற்கு சென்று பிரேம்சிங் நடத்தி வந்த கிளினிக்கை சோதனையிட்டதில் அங்கு பொது மக்களுக்கு ஊசி போட்டு ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வந்தது தெரிய வந்தது.
மேலும் இவர் பேரணாம்பட்டு அருகே உள்ள சொத்தூர், மாச்சம்பட்டு, உமராபாத் உள்ளிட்ட கிராமங்களிலும் கிளினிக் நடத்தி வந்தது தெரிய வந்தது. போலி டாக்டர் பிரேம்சிங் தலைமறைவாகி விட்டார். அதைத்தொடர்ந்து கிளினிக்கிலிருந்து ஊசி, மருந்துகள், குளுக்கோஸ் பாட்டில்களை மருத்துவ குழுவினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் இணை இயக்குனர் முன்னிலையில், கிராம நிர்வாக அலுவலர் வடிவேல், போலி டாக்டர் பிரேம்சிங் நடத்தி வந்த கிளினிக்கிற்கு சீல் வைத்தார். டாக்டர் சதீஷ் கொடுத்த புகாரின் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் தேவ பிரசாத் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான போலி டாக்டர் பிரேம்சிங்கை தேடி வருகிறார்.