காலநிலை மாற்ற விழிப்புணர்வு பலகைகளை பொது இடங்களில் வைக்க வேண்டும்: மேயரிடம் சவுமியா அன்புமணி வலியுறுத்தல்

செஸ் ஒலிம்பியாட்டுக்கு வைக்கப்பட்டதை போல் காலநிலை மாற்ற விழிப்புணர்வு பலகைகளை பொது இடங்களில் வைக்க வேண்டும் என சென்னை மேயரிடம், சவுமியா அன்புமணி வலியுறுத்தினார்.;

Update:2022-09-27 03:53 IST

சென்னை,

சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவை, ரிப்பன் கட்டிட வளாகத்தில் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி நேற்று நேரில் சந்தித்தார். மேயரிடம் காலநிலை மாற்றத்துக்கான திட்ட அறிக்கை குறித்து அமைப்பின் கருத்துகளை அவர் அறிக்கையாக சமர்பித்தார்.

பின்னர் நிருபர்களிடம் சவுமியா அன்புமணி கூறியதாவது:-

சென்னை மாநகராட்சி கடந்த 12-ந்தேதி காலநிலை மாற்ற செயல்திட்ட வரைவு அறிக்கையை வெளியிட்டிருந்தது. இந்த திட்ட அறிக்கை குறித்து செப்டம்பர் 26-ந்தேதி வரை பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த திட்டம் குறித்து முழுமையான விளக்கம் பொது மக்களிடம் சேரவில்லை.

திட்ட அறிக்கை ஆங்கிலத்தில் வெளியாகி இருந்தது. இந்த செயல் வரைவு திட்ட அறிக்கையை தமிழில் வெளியிட்டு, 2 மாதங்களுக்கு பொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்க கால அவகாசத்தை மாநகராட்சி வழங்க வேண்டும்.

விழிப்புணர்வு பலகை

சென்னையில் வெளியிடப்பட்டுள்ள வரைவு அறிக்கையில் 66 திட்டங்கள் கூறப்பட்டுள்ளது. இவற்றில் விரிவான விளக்கங்கள் இல்லை. ஒரு கோடி பேர் வசிக்கும் சென்னையில் சுற்றுச்சூழலை சீரமைக்க விரிவான திட்டம் தேவை. கடலோரம் வசிப்போர் மற்றும் விளிம்பு நிலையில் வாழும் மக்களிடம் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை மாநகராட்சி ஏற்படுத்த வேண்டும்.

செஸ் ஒலிம்பியாட்டுக்கு வைக்கப்பட்ட விளம்பர பதாகைகள் போல காலநிலை மாற்ற விழிப்புணர்வு பலகைகளை பொது இடங்களில் வைக்க வேண்டும். காற்று மாசுபாடுதான் சென்னையின் மிகப்பெரிய பிரச்சினை. ஆனால் இது குறித்து திட்ட அறிக்கையில் ஒரு வரி கூட கிடையாது. உயிர்பண்மை (பயோ டைவர்சிட்டி) தொடர்பாக திட்டங்கள் இல்லை.

ரூ.200 கோடி வீண்..

கூவம் சீரமைப்புக்கு ஒதுக்கப்பட்ட ரூ.200 கோடி நிதி வீணாகிவிட்டது. சென்னையில் சாலை பாதுகாப்பு திட்டம் அமலில் இருந்தும் அது பயனளிக்கவில்லை. 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் வெற்றியடைந்தது என்று சொல்ல முடியாது.

பல்வேறு திட்டங்கள் அறிக்கையோடு நிற்கின்றன. பொது போக்குவரத்து 20 சதவீதம் அதிகரிக்கும் என்று தெரிவித்தனர். ஆனால் 23 சதவீதம் குறைந்துள்ளது.

மழைநீர் வடிகால் பணிகளை பருவமழைக்கு முன்னதாக முடித்தால் நன்றாக இருக்கும். காலநிலை மாற்றம் தொடர்பான சென்னைக்கான செயல் திட்ட அறிக்கை வெற்றி பெறவேண்டும். அதற்கான அனைத்துவிதமான அறிவுரைகள் ஆலோசனைகளை வழங்க பசுமைத்தாயகம் அமைப்பு தயாராக இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்