துப்புரவு பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை
ஒடுகத்தூரில் துப்புரவு பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 2 மாதம் சம்பளம் தாமதமாக வழங்கியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.;
ஒடுகத்தூரில் துப்புரவு பணியாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 2 மாதம் சம்பளம் தாமதமாக வழங்கியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
துப்புரவு பணியாளர்
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட வெங்கனபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 56). இவர் 25 ஆண்டுகளாக ஒடுகத்தூர் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு அஞ்சலி, அமுதா என்ற இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி அஞ்சலிக்கு ஒரு மகளும், இரண்டாவது மனைவி அமுதாவிற்கு மூன்று மகன்களும் உள்ளனர்.
இவர் சரிவர சம்பளத்தை வீட்டில் தராததால் கடந்த இரண்டு மாதமாக குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் ஒடுகத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் திடீரென மாற்றப்பட்டதால் கடந்த இரண்டு மாதமாக துப்புரவு பணியாளர்கள் யாருக்கும் சம்பளம் போடவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் ஒடுகத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் பொறுப்பை கவனித்து வரும் திருவலம் பேரூராட்சி செயல்அலுவலர் கடந்த வாரம் சனிக்கிழமை துப்புரவு பணியாளர்களுக்கு சேர வேண்டிய இரண்டு மாத சம்பளத்தையும் செலுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
தூக்குப்போட்டு தற்கொலை
சம்பளத்தை பெற்றுக்கொண்ட கோவிந்தசாமி வீட்டில் தாராததால் குடும்பத்தில் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தி அடைந்த கோவிந்தசாமி, பேரூராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டி மக்கும் குப்பை மக்காத குப்பையை பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை கூடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நேற்று காலை துப்புரவு பணியாளர்கள் குப்பை கொட்டுவதற்காக அங்கு சென்றபோது கோவிந்தசாமி தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பினனர் இது இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கோவிந்தசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 மாத சம்பளம் தாமதமாக வழங்கியதால்தான் கோவிந்தசாமி தற்கொலை செய்து கொண்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.