கிணற்றில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் சாவு

திண்டிவனம் அருகே கிணற்றில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் இறந்தான். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-06-20 18:45 GMT

பிரம்மதேசம்:

திண்டிவனம் அருகே உள்ள கீழ்அருங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துவேல் மகன் கிரி(வயது 13). இவர் பிரம்மதேசம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். வழக்கம்போல் நேற்று முன்தினம் காலையில் முத்துவேல் வேலைக்காக கிரஷருக்கும், இவரது மனைவி மாலா விவசாய கூலி வேலைக்கும் சென்று விட்டனர். அந்த சமயத்தில் மழை பெய்ததால் கிரி, பள்ளிக்கூடத்துக்கு செல்லாமல் வீ்ட்டிலேயே இருந்தார்.

இதனிடையே வேலை முடிந்ததும் இருவரும் மாலையில் வீட்டுக்கு வந்தனர். அங்கு கிரி இல்லாததால், பல இடங்களில் தேடிப்பார்த்தனர். இருப்பினும் அவன் கிடைக்கவில்லை. இது குறித்து பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

கிணற்றில் பிணமாக மீட்பு

இந்தநிலையில் நேற்று காலை அதே கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் சுற்றுச்சுவரில் மாணவனின் செருப்பு மற்றும் குடை இருந்தது. இதை பார்த்த அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது பற்றி பெற்றோருக்கும், பிரம்மதேசம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் கிராம மக்கள் உதவியுடன் கிணற்றில் இறங்கி தேடினர். சிறிது நேர தேடுதலுக்கு பின் மாணவன் கிரி, பிணமாக மீட்கப்பட்டான். பின்னர் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டான். மாணவன் கிரி இயற்கை உபாதை கழித்துவிட்டு கால் கழுவுவதற்காக கிணற்றில் இறங்கியபோது தடுமாறி விழுந்து, நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்