ஆசிரியர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

வத்தலக்குண்டு அருகே ஆசிரியர் கண்டித்ததால் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-11-19 16:34 GMT

10-ம் வகுப்பு மாணவி

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள விராலிப்பட்டி கருப்பமூப்பன்பட்டியை சேர்ந்தவர் மாசானம். கூலித்தொழிலாளி. அவருடைய மகள் அர்ச்சனா தேவி (வயது 14). இவர், விராலிப்பட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் பள்ளியில் நடந்த தேர்வில் அர்ச்சனா தேவி காப்பி அடித்ததாக கூறப்படுகிறது. இதனை பள்ளி ஆசிரியர் ஒருவர் கண்டித்ததாக தெரிகிறது. இதில் அர்ச்சனா தேவி மனம் உடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் வீட்டுக்கு வந்த அர்ச்சனா தேவி, கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரணை

இதற்கிடையே மாசானம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தோட்டத்தில் இருந்து மாலையில் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பலதடவை கதவை தட்டி பார்த்தும் திறக்கவில்லை.

இதனையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு அர்ச்சனா தேவி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து வத்தலக்குண்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அர்ச்சனா தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேர்வில் காப்பி அடித்ததை கண்டித்ததால், 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்த சம்பவம் விராலிப்பட்டி கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்