நன்னிலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதி மாணவி பலியானார். துக்கம் தாங்க முடியாமல் தந்தை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்..
மோட்டார்சைக்கிள் மீது பஸ் மோதியது
நாகை மாவட்டம் கங்களாஞ்சேரி அருகே உள்ள பூண்டிமாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அற்புதராஜ். கூலித்தொழிலாளி. இவரது மகள் ஜாய்ஸ்மேரி(வயது15). இவர் திருவாரூரில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்றுமுன்தினம் மாலை பள்ளிக்கூடம் முடிந்ததும் ஜாய்ஸ் மேரி, அவரது தோழி ரிசிதா ஆகிய 2 பேரையும் அற்புதராஜ் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். வண்டாம்பாலை அருகே வந்தபோது, மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி வந்த தனியார் கல்லூரி பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
மாணவி பலி
இதில் படுகாயம் அடைந்த ஜாய்ஸ்மேரியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே ஜாய்ஸ்மேரி இறந்து விட்டதாக கூறினர். இதில் காயமடைந்த மற்றொரு மாணவி ரிசிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டிரைவர் கைது
இதுகுறித்து அற்புதராஜின் அண்ணன் ஆரோக்கியசாமி கொடுத்த புகாரின் பேரில் நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் கல்லூரி பஸ் டிரைவர் கோதண்டராமனை (42) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தன் கண்முன்னே மகள் அடிபட்டு பலியானதால், துக்கம் தாங்க முடியாமல் அற்புதராஜ் வயலுக்கு தெளி்க்கும் பூச்சி மருந்தை(விஷம்) குடித்துள்ளார்.
தற்கொலை முயற்சி
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அற்புதராஜை உடனடியாக திருவாரூ அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்தில் மகள் இறந்த சோகத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்்தை ஏற்படுத்தியது.