காதலித்து திருமணம் செய்த பெண் தூக்கில் தொங்கியதால் உறவினர்கள் மோதல்
வாணியம்பாடி அருகே காதல் திருமணம் செய்த 2 ஆண்டில் இளம்பெண் தூக்கில் தொங்கியபடி கிடந்த நிலையில் அவர் இறந்து விட்டார். அவரை அடித்துக்கொன்றதாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து இருவரின் உறவினர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாணியம்பாடி அருகே காதல் திருமணம் செய்த 2 ஆண்டில் இளம்பெண் தூக்கில் தொங்கியபடி கிடந்த நிலையில் அவர் இறந்து விட்டார். அவரை அடித்துக்கொன்றதாக புகார் கூறப்பட்டதை தொடர்ந்து இருவரின் உறவினர்கள் மோதலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருமணம்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த சங்கராபுரம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 23) என்பவரும், வாணியம்பாடி- சவுக்குதோப்பு பகுதியை வினோதினி (20) என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
திருமணம் ஆன சில மாதங்களில் வினோதினியின் தாய் வீட்டார் மோட்டார் சைக்கிள், நகை உள்ளிட்ட சீர் வரிசைகள் கொடுத்ததாக கூறப்படுகிறது. அதன்பின்னரும் கடந்த சில மாதங்களாக வினோதினியை அவரது தாய் வீட்டிற்கு சென்று பணம் நகை வாங்கி வரும்படி கணவர் விஜய் சித்திரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சில நாட்களாக பிரச்சனை இருந்து வந்தது.
இந்த நிலையில் சங்கராபுரம் பகுதியில் உள்ள அவரது கணவன் வீட்டில் இளம்பெண் வினோதினி தூக்கில் தொங்கியபடி கிடந்தார். இதனை அறிந்த கணவன் மற்றும் அவரது உறவினர்கள் அவசர அவசரமாக அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக டாபக்டர்கள் கூறினர்.
இது குறித்து வினோதினியின் தாய் வீட்டுக்கு தாமதமாக தகவல் அளித்தும் அவர்களை பார்க்க விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது. வினோதினியை அடித்து கொலை செய்துவிட்டதாகவும் கணவன் விஜய்யை கைது செய்யக்கோரியும் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் வினோதினியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவர்களுக்கும் விஜய் உறவினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
மேலும் அங்கு வந்த விஜயை உறவினர்கள் தாக்க முற்பட்டதால் போலீசார் தடுக்க முயன்றனனர். அப்போது தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது,
கோட்டாட்சியர் வாகனம் முற்றுகை
மேலும் வினோதினியின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் வாகனத்தை இளம்பெண்ணின் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து இளம் பெண்ணின் தாய் விசாலாட்சி கண்ணீர் மல்க கூறுகையில், ''எனது மகள் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணமான சில மாதங்களில் எனது மகளுக்கு நகை மற்றும் சீர்வரிசை, இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருட்களை வழங்கினேன். சில நாட்களில் மீண்டும் நகை, பணம் வாங்கி வரும்படி கணவன் சித்திரவதை செய்து வருவதாக எனது மகள் தெரிவித்ததாள். எனது மகளை அடித்து கொன்று விட்டனர்'' என்றார்.
பின்னர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையிலான அதிகாரிகள் மற்றும் மருத்துவக் குழுவினர் முன்பு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இரு தரப்பினரிடையே விசாரணை மேற்கொண்டனர்.
கைது
இந்த சம்பவம் குறித்து அம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய்யை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.