மாமன்ற உறுப்பினர்களிடையே மோதல் விவகாரம்: நெல்லை மேயருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு ஆலோசனை

நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தில் நீடித்துவரும் தொடர் குழப்பம், சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவர இந்த விவாதம் நடைபெறுகிறது.

Update: 2023-09-01 12:40 GMT

திருநெல்வேலி,

நெல்லை மாநகராட்சி மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த பி.எம்.சரவணன் உள்ளார். இவர் மீது கட்சி நிர்வாகிகள் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். மேலும் மாநகராட்சி கூட்டத்திலும் தி.மு.க. கவுன்சிலர்கள் காரசார விவாதங்களில் ஈடுபட்டு உள்ளனர். சமீபத்தில் மேயரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி கவுன்சிலர்கள் கடிதம் கொடுத்ததாக தகவல் பரவியது.

இதற்கிடையில், நேற்று பி.எம்.சரவணன், சென்னைக்கு சென்று தனது மேயர் பதவியை ராஜினாமா செய்து விட்டார் என்றும், இது தொடர்பாக அவர் கட்சி தலைமையை சந்தித்து கடிதம் கொடுத்ததாகவும் சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் நெல்லையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், இந்த தகவலை அவர் மறுத்து உள்ளார். எனது மகன் கல்லூரி படிப்பு விஷயமாகவும், சொந்த வேலைக்காகவும் சென்னைக்கு வந்ததாகவும், நான் சென்னைக்கு செல்லும் போதெல்லாம் இதுபோல் தொடர்ச்சியாக தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்றும் அவர் கூறினார்.

இந்த நிலையில், நெல்லை மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இடையேயான மோதல் விவகாரம் தொடர்பாக நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

நெல்லை சங்கர் நகரில் நடைபெறும் இந்த ஆலோசனையில் மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ உளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர், முன்னாள் அமைச்சர் மைதீன் கான் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தில் நீடித்துவரும் தொடர் குழப்பம், சர்ச்சையை முடிவுக்கு கொண்டுவர இந்த விவாதம் நடைபெறுகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்