ரூட் தல பிரச்சினையில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல்; ஒருவருக்கு கத்தியால் வெட்டு

ரூட் தல பிரச்சினையில் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு மாணவர் கத்தியால் வெட்டப்பட்டார்.

Update: 2023-10-12 04:10 GMT

சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு நோக்கி நேற்று மதியம் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அரும்பாக்கம், என்.எஸ்.கே.நகரில் அந்த பஸ்சில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் ஏறினர். அவர்கள் பஸ்சின் பக்கவாட்டில் தட்டி தாளம்போட்டு, பாட்டு பாடியபடி வந்தனர்.

அரும்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது திடீரென பஸ்சில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.

இரு தரப்பு மாணவர்களும் சாலையில் கிடந்த கற்கள், மதுபாட்டில்கள், கட்டைகள் ஆகியவற்றை ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி வீசி தாக்கி கொண்டனர். இதனை கண்டதும் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினார்கள்.

அப்போது அங்கு ரோந்து வந்த போலீசாரை கண்டதும் கல்லூரி மாணவர்கள் சிலர் அந்த வழியாக சென்ற அரசு பஸ் மற்றும் ஆட்டோக்களில் ஏறி தப்பிச்சென்றனர். சிலரை மட்டும் போலீசார் பிடித்து சென்றனர்.

இதற்கிடையில் அரும்பாக்கத்தில் மோதலில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் சிலர் கோயம்பேடு மேம்பாலம் அருகே பஸ்சி்ல் இருந்து இறங்கி அங்கு மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். அப்போது மனோஜ் என்ற ஒரு மாணவரை கத்தியால் வெட்டினர். இதில் காயம் அடைந்த அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

கல்லூரி மாணவர்கள் மோதல் தொடர்பாக அரும்பாக்கம் மற்றும் கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரூட் தல பிரச்சினை தொடர்பாக கல்லூரி மாணவர்கள் இடையே இந்த மோதல் ஏற்பட்டது தெரியவந்தது. எனினும் இந்த மோதலுக்கு வேறு ஏதும் காரணமா? எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுெதாடர்பாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் மனோஜிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கல்லூரி மாணவர்கள் மோதலில் ஈடுபட்டபோது அதனை அங்கிருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து உள்ளனர். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்