பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பதில் கிராம மக்களிடையே மோதல் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தால் பரபரப்பு

பழவேற்காடு ஏரியில் மீன்பிடிப்பதில் ஏற்பட்ட மோதல் காரணமாக கூனங்குப்பம் கிராம மக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் குடியேறும் நடைபயணம் மேற்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-01 12:24 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காடு ஏரி 38 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்தியாவில் 2 உவர்ப்புநீர் ஏரியாக விளங்குகிறது. இந்த ஏரியில் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமத்தினர் மீன், நண்டு பிடித்து தொழில் செய்து வருகின்றனர்.

பழவேற்காடு அருகே உள்ள கூனங்குப்பம் மீனவ கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் பழவேற்காடு ஏரியில் மீன் நண்டு பிடித்து தொழில் செய்து வருகின்றனர். இதேபோல் கோட்டைக்குப்பம் ஊராட்சியில் அடங்கிய ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம், நடுவூர்மாதாகுப்பம் உள்பட பல கிராம மக்கள் பழவேற்காடு ஏரியில் இறால் பிடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கூனங்குப்பம் மீனவர்களுக்கும் கோட்டைக்குப்பம் ஊராட்சியில் அடங்கிய கிராமங்களில் வசிக்கும் மீனவர்களுக்கும் நண்டு பிடிப்பதில் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. இதையடுத்து கூனங்குப்பத்தை சேர்ந்தவர்கள் பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிக்க கூடாது என தடை விதித்து அவர்களின் வலைகளை மற்ற 3 கிராம மக்கள் பறித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து திருப்பாலைவனம் போலீஸ் நிலையம், பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம், மீன்வளத்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பலமுறை சமரச பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் கூனங்குப்பம் கிராம மக்கள் ஏரியில் நண்டு பிடிப்பதில் தொடர்ந்து சிக்கல் நிலையில் கூனங்குப்பம் மீனவர்களின் வாழ்வாதார நிலைமை பெரிதும் பாதிக்கப்பட்டது.

பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிப்பது தொடர்பான பிரச்சினைக்கு தீர்க்க கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடியேரும் போராட்டத்தை நடத்த கிராம மக்கள் திட்டமிட்டனர். அதன்படி நேற்று காலை கிராம மக்கள் சுமார் 2 அயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆதார் அட்டை, ரேசன் கார்டு போன்ற ஆவணங்களையும், மீன்பிடி வலைகளையும் எடுத்துகொண்டு ஊரை காலி செய்து விட்டு கலெக்டர் அலுவலகத்தை நோக்கி நடைபயணத்தை தொடங்கினர். இதில் குடும்பம் குடும்பமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள், குழந்தைகள் என பலர் கலந்து கொண்டனர்.

பொன்னேரி பழவேற்காடு சாலையில் சென்று கொண்டிருந்தபோது மீனவர்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீனவ மக்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிப்பதில் மற்ற கிராமங்கள் யாரும் எங்களுக்கு இடையூறு ஏதும் செய்யக்கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

தொடர்ந்து வஞ்சிவாக்கம் பகுதியில் நடைபயணம் செய்த மீனவர்கள் திடீரென பழவேற்காடு- செங்குன்றம் சாலையில் சென்று கொண்டிருந்த 2 அரசு பஸ்களை சிறை பிடித்தனர். இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்களே மறியலை கைவிட்டனர்.

இதையடுத்து அதிகாரிகள் முயற்சியால் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்து புயல் பேரிடர் பாதுகாப்பு மையத்தில் அனைவரையும் உட்கார வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யாராம்நாதன் தலைமையில் தாசில்தார் செல்வகுமார் மற்றும் போலீசார் முன்னிலையில் கூணங்குப்பம் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 2 மணி நேரம் நடத்திய பேச்சு வார்த்தையில் பழவேற்காடு பகுதி கூணங்குப்பம் மற்றும் கோட்டைக்குப்பம் நடுவூர்மாதாகுப்பம், ஆண்டிகுப்பம் ஆகிய கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிப்பதில் ஏற்படும் பிரச்சினையை குறித்து இன்று காலை 11 மணிக்கு 2 தரப்புகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தை நோக்கி தங்களது பயண போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக கூனங்குப்பம் கிராம மக்கள் தெரிவித்தனர். மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை போராட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவோம் என மீனவர்கள் தெரிவித்தனர்.

தொடர்ந்து டி.எஸ்.பி பிரியாசக்தி தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பழவேற்காடு, வஞ்சிவாக்கம், பொன்னேரி ஆகிய பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்