ராமேசுவரம் - தாம்பரம் புதிய ரெயிலுக்கான நேர அட்டவணை வெளியீடு
ராமேசுவரம்- தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.;

சென்னை,
புதிய பாம்பன் ரெயில் பாலம் ரூ.550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 6-ந்தேதி திறந்து வைக்கிறார். அன்றைய தினம் மதியம் 12.45 மணிக்கு ராமேஸ்வரம் ஆலயம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அப்போது ராமேசுவரம்- தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
இந்த நிலையில், இந்த புதிய ரெயில் சேவைக்கான நேர அட்டவணையை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமேசுவரத்தில் இருந்து வரும் 6-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்(வண்டி எண்.16104), ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அரந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து அதே தேதியில் (6-ந்தேதி) மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்(16103), அதே வழித்தடம் வழியாக மறுநாள் காலை 5.40 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும். இந்த ரெயில்கள் தினசரி ரெயில்காக இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு நாளை(சனிக்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.