பழவேற்காடு ஏரியில் மீனவர்களிடையே மோதல்: மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாக 12 கிராமத்தை சேர்ந்த மக்கள் சாலை மறியல்
பழவேற்காடு ஏரியில் மீனவர்களிடையே ஏற்பட்ட தகராறில் மீன்பிடி தொழில் பாதிக்கப்படுவதாக 12 கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.;
பழவேற்காடு ஏரியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோட்டைக்குப்பம் ஊராட்சியில் அடங்கிய நடுவூர்மாதாகுப்பம் மீனவர்களுக்கும் கூணங்குப்பம் மீனவர்களுக்கும் இடையே மீன்பிடிப்பதில் தகராறு ஏற்பட்டது. பின்னர் மோதலாக மாறியது. இதில் நடுவூர்மாதாகுப்பத்தை சேர்ந்த 7 மீனவர்கள் படுகாயம் அடைந்தனர்.
ஏரியில் மீனவர்களை தாக்கிய கூணங்குப்பம் மீனவர்களை கைது செய்ய கோரி 2 நாட்களுக்கு முன்பு மீனவ பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கல்யாண், பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யாராமநாதன், தாசில்தார் செல்வகுமார் உள்பட போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் திருப்பாலைவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து கூணங்குப்பத்தை சேர்ந்த 13 பேரை கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து பழவேற்காடு ஏரியில் மீன் பிடி தொழில் செய்யும் கோட்டைக்குப்பம், ஆண்டிக்குப்பம், நடுவூர்மாதாகுப்பம் உள்பட 12 கிராம மக்கள் பழவேற்காடு பஜாரில் நேற்று காலையில் ஒன்று கூடினர். தகவல் அறிந்த தாசில்தார் செல்வகுமார், டி.எஸ்.பி கிரியாசக்தி ஆகியோர் மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அனைவரும் கலைந்து சென்றனர். சிறிது நேரத்தில் மீண்டும் ஆண்கள், பெண்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திடீரென சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பழவேற்காடு ஏரியில் மீன்பிடித் தொழில் செய்யும் நாங்கள் பாதிக்கப்படுவதாக, தாக்குதல் செய்த கூணங்குப்பம் மீனவர்களை கைது செய்ய கோரி சாலை மறியல் போராட்டத்தை நடத்தினர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யாராமநாதன் சாலை மறியலில் ஈடுபட்ட மீனவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி பழவேற்காடு ஏரியில் குற்ற செயலில் ஈடுபடுவர்கள் சிலரை கைது செய்துள்ளதாகவும், மீதமுள்ள நபர்களை உடனடியாக கைது செய்ய உறுதி அளிப்பதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்று மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வகையில் பழவேற்காட்டில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.