2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தருவதாக கூறி சென்னை தனியார் நிறுவன அதிகாரியிடம் கத்தி முனையில் ரூ.60 லட்சம் வழிப்பறி:வீரபாண்டியை சேர்ந்த 2 பேர் கைது; பரபரப்பு தகவல்

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தருவதாக கூறி சென்னை தனியார் நிறுவன அதிகாரியிடம் கத்தி முனையில் ரூ.60 லட்சம் வழிப்பறி செய்த வீரபாண்டியை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-02-20 18:45 GMT

தனியார் நிறுவன அதிகாரி

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா மூர்த்தியம்மாள்புரம் அருகே உள்ள பணையாக்கோட்டையை சேர்ந்தவர் வெள்ளையப்பன் (வயது 42). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பான ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

நான் கடந்த மாதம் பொங்கல் பண்டிகையின்போது எனது ஊருக்கு சென்றேன். அப்போது எனது ஊரைச் சேர்ந்த விஜயகுமார், அவருடைய நண்பர் கோவிந்தனுடன் வந்தார். அவர்கள் என்னை சந்தித்து, ரூ.80 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால், ரூ.1 கோடிக்கு 2000 ரூபாய் நோட்டுகள் தருவதாகவும், நிறைய இடங்களில் இதுபோன்ற நடப்பதாகவும் கூறினர். பின்னர் பலமுறை என்னுடைய செல்போனுக்கு தொடர்பு கொண்டு ஆசை வார்த்தைகள் கூறினர்.

ரூ.60 லட்சத்துடன் தேனி வருகை

பின்னர் நான் எனது நிறுவன உரிமையாளர் முருகராஜ், அவருடைய பங்குதாரர் லட்சுமிகாந்தன் உள்பட பலரிடம் இதுகுறித்து கூறி, ரூ.60 லட்சத்துக்கு 500 ரூபாய் நோட்டுகளை தயார் செய்தேன். அதை கொடுத்து ரூ.75 லட்சம் பெற்றுக் கொள்ள முடிவு செய்தேன்.

கடந்த 4-ந்தேதி உரிமையாளரின் காரில் சென்னையில் இருந்து புறப்பட்டு தேனிக்கு வந்தேன். என்னுடன் முருகராஜ், நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர், கார் டிரைவர் ஆகியோர் வந்தனர். தேனி புதிய பஸ் நிலையத்துக்கு வந்த போது, அங்கு விஜயகுமார், கோவிந்தன் ஆகியோர் காத்திருந்தனர். அவர்களையும் காரில் ஏற்றிக் கொண்டு கலெக்டர் அலுவலகம் அருகில் சென்றோம்.

அப்போது அங்கு வீரபாண்டியை சேர்ந்த யுவராஜ் (31), கார்த்திக்ராஜா (31), சண்முகம் ஆகியோர் 2 கார்களில் வந்தனர். அங்கிருந்து ஒரே காரில் செல்லலாம் என்று கூறி என்னையும், முருகராஜையும் அவர்களுடன் காரில் அழைத்துச் சென்றனர். க.விலக்கில் இருந்து கண்டமனூர் செல்லும் சாலையில் தேக்கம்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகில் தோட்டத்து பங்களாவுக்கு அழைத்துச் செல்வதாக கூறினர். ஆனால், நடுவழியில் நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி ரூ.60 லட்சத்தை பறித்துக் கொண்டனர். பின்னர், சிறிது தொலைவில் இறக்கி விட்டுச் சென்றனர்.

இதையடுத்து தேனியில் இருந்து உரிமையாளரின் கார் டிரைவரை வரவழைத்து தப்பி சென்றோம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

2 பேர் கைது

அதன்பேரில், கண்டமனூர் போலீசார் நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர். இந்த மோசடி நபர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில், யுவராஜ், கார்த்திக்ராஜா ஆகிய 2 பேரையும் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர். மற்ற பணத்தை என்ன செய்தார்கள்? என்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கிடைத்த தகவல் குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், "இந்த மோசடியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கிறது. மோசடி செய்து அபகரித்த பணத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் ஒரு சொத்து வாங்கி இருக்கின்றனர். மற்ற பணம் என்ன ஆனது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. மற்றவர்களும் சிக்கினால் தான் முழுமையான விவரம் தெரியவரும்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்