வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி; 2 பேர் கைது
வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;
மதுரை,
வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரூ.1 கோடி மோசடி
மதுரை காமராஜர் சாலை நவரத்தினபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார். நகைக்கடை நடத்தி வருகிறார். தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக வங்கியில் கடன் வாங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவரை தொடர்பு கொண்ட செல்லூரை சேர்ந்த மகாலட்சுமி (வயது 47), பழனிக்குமார் (37), பூஜா ஆகியோர் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதனை நம்பிய சந்தோஷ்குமார், பல்வேறு தவணைகளாக ரூ.1 கோடியே 18 லட்சத்து 83 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார். பணத்தை வாங்கிய அவர்கள் வங்கியில் கடன் வாங்கி கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர்.
2 பேர் கைது
இதையடுத்து சந்தோஷ்குமார் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து அவர் மத்திய குற்ற தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகாலட்சுமி, பழனிக்குமார் ஆகியோரை கைது செய்தனர்.