பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயற்சி

சேலம் மாநகராட்சி 5-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அருள் எம்.எல்.ஏ. சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

Update: 2023-10-24 20:15 GMT

சேலம் மாநகராட்சி 5-வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலைமறியலுக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் அருள் எம்.எல்.ஏ. சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

சாக்கடை கால்வாய்

சேலம் மாநகராட்சி 5-வது வார்டுக்கு உட்பட்ட பெரியபுதூர், பாறை வட்டம் பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி சாரதா கல்லூரி அருகில் திரண்டு சாலை மறியலுக்கு முயன்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

பாறை வட்டம், பெரியபுதூர் உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கால்வாய் வசதி இல்லை. சிறிதளவு மழை பெய்தாலும், மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. தாழ்வான இடங்களில் சாக்கடை கழிவு நீருடன் மழை நீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே சாக்கடை கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கும்படி பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை. எனவே அடிப்படை வசதிகள் செய்து தரும்படி மறியல் போராட்டம் நடத்த வந்து உள்ளோம் என்றனர்.

போராட்டம் நடத்தப்படும்

தகவல் அறிந்த அருள் எம்.எல்.ஏ., அஸ்தம்பட்டி மண்டல குழு தலைவர் உமாராணி மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினர். இதையடுத்து மறியல் முயற்சியை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்

இதுகுறித்து அருள் எம்.எல்.ஏ. கூறுகையில், பாறை வட்டம் பகுதியில் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியில் தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் சாக்கடை கால்வாய் வசதி அமைக்கவில்லை. இதனால் மழைநீர் குடியிருப்பை சுற்றி தேங்கி விடுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. எனவே 3 மாதத்தில் சாக்கடை கால்வாய் வசதி ஏற்படுத்தி தரவில்லை என்றால் பொதுமக்களுடன் சேர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்