பொதுமக்கள் முற்றுகை போராட்டம்

பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2022-09-10 17:57 GMT

மனைப்பிரிவு

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கைலாசபுரம் கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஜூன் மாதம் அந்த கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான புளியந்தோப்பில் சுமார் 27.5 ஏர்ஸ் இடத்தை 2½ சென்ட் வீதம், 12 மனைப் பிரிவுகளாக வருவாய்த்துறையினர் அளந்து கல் போட்டுள்ளனர்.

இந்த இடத்தை நீர்நிலைகளில் குடியிருந்து வரும் இடம் இல்லாத பொதுமக்களுக்கும், அதே கிராமத்தில் உள்ள இடம் இல்லாத ஏழை, எளிய மக்களுக்கும் வழங்க வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு தேவையான அரசு கட்டிடங்கள் வேண்டும் என்றும் ஏற்கனவே மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம், மனைப்பிரிவு அமைக்கப்பட்ட இடத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முற்றுகை போராட்டம்

இந்நிலையில் நேற்று காலை சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வீரபோகம் பிரிவு சாலையில் கைலாசபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராம பகுதியில் உள்ள வீட்டு மனைகளை எங்கள் கிராமத்தை சேர்ந்த இடம் இல்லாத பொதுமக்களுக்கே வழங்க வேண்டும். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மனை வழங்கப்பட்ட நபர்கள், அந்த இடத்தில் கொட்டகைகள் அமைக்க வந்துள்ளனர். நாங்கள் நீதிமன்றத்தில் மனு கொடுத்துள்ளோம். இந்நிலையில் இந்த இடத்தில் கொட்டகைகள் அமைக்கக்கூடாது என்று தடுத்து நிறுத்தினோம். இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீசார், இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இடத்தை யாரும் அனுபவம் கொள்ளக்கூடாது என்றும், கோர்ட்டு தீர்ப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினர். மேலும் உடையார்பாளையம் கோட்டாட்சியர் விசாரணை நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் கூறினர்.

விசாரணைக்கு ஏற்பாடு

இதையடுத்து இன்ஸ்பெக்டர் பெரியசாமி, வருவாய் ஆய்வாளர் ரமேஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் ராஜேந்திரன், வேல்முருகன் ஆகியோர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோட்டாட்சியர் விசாரணை நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்