செங்கோட்டையில் நகரசபை கூட்டம்: கதவை பூட்டி தலைவரை வெளியே செல்ல விடாமல் தடுத்ததால் பரபரப்பு
செங்கோட்டை நகரசபை கூட்டத்தில் கதவை பூட்டி தலைவரை வெளியே செல்ல விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;
செங்கோட்டை:
செங்கோட்டை நகரசபை சாதாரண கூட்டம் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது. கூட்டத்திற்கு தலைவா் ராமலட்சுமி தலைமை தாங்கினார். துணைத்தலைவா் நவநீதகிருஷ்ணன், மேலாளா் ரத்தினம், சுகாதார ஆய்வாளா் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் உறுப்பினா்கள் ஜெகன், முத்துப்பாண்டி, வேம்புராஜ், சுடர்ஒளி ஆகியோர் எழுந்து தலைவா் மீது வழக்கு உள்ள நிலையில் அவர் எப்படி கூட்டத்ததை நடத்தலாம் என்று ஆவேசமாக கேள்வி கேட்டு முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னர் தள்ளு முள்ளு ஏற்படும் சூழ்நிலை உருவானது.
இதையடுத்து கூட்டத்தை விட்டு தலைவர் வெளியேற முயன்றார். ஆனால் உறுப்பினா்கள் அவரை சூழ்ந்து கொண்டு வெளியே செல்ல விடாமல் தடுத்தனா். இதற்கிடையே தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் சம்பவத்தை தனது செல்போன் மூலம் படம் பிடித்து கொண்டிருந்தார். அவரை உறுப்பினா்கள் தடுத்து வெளியே செல்லும்படி சத்தம் போட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அந்த நபரை வெளியேற்றினா். பின்னர் நகர்மன்ற தலைவா், கூட்ட அரங்கின் பின்புற வாசல் வழியாக வெளியே சென்று விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினா்கள் தலைவர் பதவி விலகக்கோரி கோஷங்கள் எழுப்பினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.