சுரங்கப்பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

விழுப்புரம் அருகே சுரங்கப்பாதை அமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

Update: 2023-07-10 18:45 GMT

விழுப்புரம்

விழுப்புரம் அருகே சாமிப்பேட்டை கிராமத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகிற நிலையில் அங்கு கிராம மக்கள் சென்று வருவதற்கு வசதியாக சுரங்கப்பாதை அமைக்கக்கோரி அங்குள்ள மக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையிடம் பலமுறை முறையிட்டு வந்தனர். ஆனால் தற்போது அங்கு சாலைப்பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில் இதுநாள் வரை சுரங்கப்பாதை அமைக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அங்கு அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலையும் குடியிருப்புகளுக்கு அருகில் அமைக்காமல் வெகு தொலைவில் அமைத்துள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் தங்கள் குடியிருப்புகளில் இருந்து சர்வீஸ் சாலைக்கு வருவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இந்த நிலையில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 11 மணியளவில் அங்குள்ள பிரதான சாலைக்கு திரண்டு வந்து திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சாலைப்பணிக்காக நின்றிருந்த வாகனங்களையும் அவர்கள் சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உங்களுடைய கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக போலீசார் உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் காலை 11.20 மணியளவில் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனிடையே மறியலில் ஈடுபட்டதாக 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்