நூறு நாள் திட்டத்தில் வேலை வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ஒலியமங்கலத்தில் நூறு நாள் திட்டத்தில் வேலை வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
காரையூர்:
சாலை மறியல்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியத்தில் ஒலியமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் ஒரு மாதகாலமாக தேசிய ஊரக நூறு நாள் வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலைகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளனர். இதனால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று காரையூர் அருகே ஒலியமங்கலம்-பாலகுறிச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதுகுறித்து தகவலறிந்த பொன்னமராவதி தாசில்தார் பிரகாஷ், அன்னவாசல் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர், காரையூர் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஒருவார காலத்தில் நூறுநாள் வேலை வழங்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஒலியமங்கலம்-பாலகுறிச்சி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.