அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியல்

வடகாடு அருேக மகளிர் உரிமைத்தொகை வழங்கக்கோரி அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2023-10-07 18:04 GMT

சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே ஆலங்காடு கிராமத்தில் சுமார் 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு ரேஷன் கார்டு உள்ளது. இதில் 295 பேர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த நிலையில், 200- க்கும் மேற்பட்டவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக பலமுறை ஆலங்குடி தாசில்தார் மற்றும் வருவாய் துறையினரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கக்கோரி இன்று மேற்பனைக்காட்டில் இருந்து ஆலங்குடி சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் வாக்குவாதம்

இதனால் பஸ்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்ட நிலையில் 15-ம் எண் கொண்ட பஸ் மட்டும் போராட்டக்காரர்கள் மத்தியில் மாட்டிக் கொண்டது. இந்த சூழ்நிலையில் மாநில திறனாய்வு தேர்வு எழுதுவதற்காக அந்த பஸ்சில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்திற்கு செல்ல பயணம் செய்திருந்தனர். இதனால் அந்த மாணவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் மாணவர்களுக்கு வேறு ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து தேர்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதனையடுத்து சம்பவ இ்டத்திற்கு வடகாடு போலீசார் மற்றும் ஆலங்குடி வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ் ஆகியோர் விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மகளிர் உரிமைத்தொகை கிடைக்காமல் விடுபட்ட நபர்களுக்கு இன்னும் 5 நாட்களுக்குள் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் மேற்பனைக்காட்டில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அறந்தாங்கி

அறந்தாங்கி அருகே விஜயபுரம், கூகனூர் கிராமங்களை சேர்ந்த பெண்கள் சுப்பிரமணியபுரம் கடைவீதியில் மகளிர் உரிமைத்தொகை வழங்கக்கோரி மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வந்த அறந்தாங்கி தாசில்தார் பாலகிருஷ்ணன், துணை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை யடுத்து அதன் பிறகு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்