செல்போன் கோபுரத்தை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் உண்ணாவிரதம்
குடியாத்தத்தில் செல்போன் கோபுரத்தை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;
சொல்போன் கோபுரம் அமைப்பு
குடியாத்தம் நகராட்சி 24-வது வார்டு புவனேஸ்வரிபேட்டை அடுத்த போடிப்பேட்டை வேதாந்த நகர் பகுதியில் தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு சென்ற பொதுமக்கள் செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக பணிகள் கைவிடப்பட்டது. இந்தநிலையில் மீண்டும் நேற்று செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போதும் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து அங்கு விரைந்து வந்த போலீசார் செல்போன் கோபுரம் அமைப்பவர்களிடம் இப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் செல்போன் கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறக் கூடாது என தெரிவித்தனர். இருப்பினும் பணிகள் நடைபெற்றுள்ளது.
உண்ணாவிரத போராட்டம்
செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை இரவு 300-க்கும் மேற்பட்டோர் இரவிலும் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
நான்கு நாட்கள் ஆகியும் செல்போன் கோபுரத்தை அப்பகுதியில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று மீண்டும் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக குடியாத்தம் நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர மன்ற உறுப்பினர் ஆட்டோமோகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் விஜயகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் சென்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இப்பகுதியில் செல்போன் கோபுரம் இதுவரை இயங்கவில்லை, இப்பகுதியில் இருந்து அகற்ற உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று இருப்பதாகவும் தெரிவித்தனர் இதனை தொடர்ந்து பல மணி நேரம் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.