தேவாலயத்துக்குள் புகுந்து அட்டகாசம்: 2 பாதிரியார்கள் கைது

நள்ளிரவில் தேவாலயத்துக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய 2 பாதிரியார்கள் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-03-31 20:02 GMT

கோவை,

கோவை ரேஸ்கோர்சில் உள்ள தேவாலயத்தில், நிர்வாகிகள் இரு தரப்பாக இருக்கிறார்கள். இதனால் அவ்வப்போது மோதல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

இந்தநிலையில் ஒரு தரப்பை சேர்ந்த பாதிரியார்களான சார்லஸ் சாம்ராஜ், ராஜேஷ் மற்றும் அவர்களது தரப்பினர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஆலயத்துக்குள் அத்துமீறி புகுந்ததாக தெரிகிறது.

அப்போது அவர்கள் அங்கு இருந்த நாற்காலிகள், கண்காணிப்பு கேமராக்கள், மைக், ஒலிப்பெருக்கி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி அட்டகாசத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சார்லஸ் சாம்ராஜ், ராஜேஷ் ஆகியோரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து செயலாளர் பிரபாகர் போலீசில் புகார் அளித்தார்.

அந்த புகார் மனுவில், ஆலய கட்டுப்பாட்டை மீறியதாக ஏற்கனவே இடைநீக்கம் செய்யப்பட்ட பாதிரியார்கள் சார்லஸ் சாம்ராஜ், ராஜேஷ் உள்பட சிலர் ஆலயத்துக்குள் அத்துமீறி நுழைந்தனர். அங்கிருந்த நாற்காலிகள், கண்காணிப்பு கேமரா, மைக், ஒலிப்பெருக்கி உள்ளிட்ட பல்வேறு பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

அதன் பேரில் ஆலயத்துக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்திய சார்லஸ் சாம்ராஜ், ராஜேஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்