கல்லறைத் திருநாளை கடைப்பிடித்த கிறிஸ்தவர்கள் - மெழுகுவர்த்தி ஏற்றி சிறப்பு பிரார்த்தனை
மறைந்தவர்களின் நினைவாக சிலர் ஏழை, எளியவர்களுக்கு உணவு, உடை ஆகியவற்றை வழங்கினர்.;
சென்னை,
உலகம் முழுவதும் இன்று கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளை கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்திலும், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த மக்கள், மறைந்த தங்கள் உறவுகளின் கல்லறைகளில் சிறப்பு பிரார்த்தனைகளை மேற்கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் பங்கு ஆலயங்களைச் சேர்ந்த அனைத்து கல்லறைத் தோட்டங்களிலும் மறைந்தவர்களின் ஆன்ம சாந்திக்காக சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. புதுச்சேரியில் உப்பளம், முத்தியால்பேட்டை, உழவர்கரை, வில்லியனூர், அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்லறைகளை சுத்தம் செய்து, பூக்களைக் கொண்டு அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் அதிகாலை முதலே தங்கள் முன்னோர்கள் கல்லறைகளில் மலர்களை தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் ஜெபம் செய்தனர். அதே போல் கோவையில் உள்ள கல்லறைத் தோட்டங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. மேலும் மறைந்தவர்களின் நினைவாக சிலர் ஏழை, எளியவர்களுக்கு உணவு, உடை ஆகியவற்றை வழங்கினர்.