ஏழைகளுக்கு தர்மம் வழங்கிய கிறிஸ்தவர்கள்

பாளையங்கோட்டையில் மாம்பழ சங்க பண்டிகையையொட்டி ஏழைகளுக்கு கிறிஸ்தவர்கள் தர்மம் வழங்கினர்.

Update: 2022-07-13 20:11 GMT

நெல்லை சி.எஸ்.ஐ. திருமண்டலம் சார்பில் மாம்பழ சங்கம் மற்றும் ஸ்தோத்திர பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாம்பழ சங்கம், 242-வது ஸ்தோத்திர பண்டிகை நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாள் பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் ஆலய வளாகத்தில் அருள் தொண்டர்களின் தியாக நினைவு ஸ்தோத்திர ஆராதனை நடந்தது. தொடர்ந்து பாளையங்கோட்டை மிலிட்டரி லைன் குளோரிந்தாள் ஆலயத்தில் உள்ள மிஷினரிகளின் கல்லறைகளில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கிறிஸ்தவர்களின் பவனி நடந்தது. பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் கொடியேற்று விழா, ஆயத்த ஆராதனை, இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. 2-ம் நாளான நேற்று மாம்பழ சங்க பண்டிகை நடந்தது. காலையில் பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் சேகர குரு சுதர்சன் தலைமையில் திருவிருந்து ஆராதனை நடந்தது. மதியம் மாம்பழ சங்க பண்டிகை ஆராதனை நடந்தது. கோவை பிஷப் தீமோத்தி ரவீந்தர் தேவ்பிரதீப் தேவ செய்தி வழங்கினார். பிஷப் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ் பேசினார்.

விழாவில் திருமண்டல உப தலைவர் சுவாமிதாஸ், லே செயலாளர் டி.ஜெயசிங், குருத்துவ செயலாளர் பாஸ்கர் கனகராஜ், பொருளாளர் ஏ.டி.ஜெ.சி.மனோகர், கன்வீனர்கள் ஜெபராஜ், அருள்ராஜ் பிச்சமுத்து, ஜெபக்குமார், ஸ்டீபன் மற்றும் திருமண்டல கல்வி நிறுவனங்களின் நிர்வாகிகள், முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஏழைகளுக்கு கிறிஸ்தவர்கள் தர்மம் வழங்கினர். நூற்றாண்டு மண்டபம் முன்புள்ள சாலையின் இருபுறங்களிலும் ஏராளமான ஏழைகள் வரிசையாக அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு பணம், அரிசி, ரொட்டி, உணவுப்பொருட்கள், துணிகள், மாம்பழம் போன்றவற்றை தானமாக வழங்கினர். மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இன்று (வியாழக்கிழமை) பாளையங்கோட்டை கதீட்ரல் ஆலயத்தில் 242-வது ஸ்தோத்திர பண்டிகை ஆராதனையும், திருவிருந்து ஆராதனையும் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்