கோவில்களில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
பாளையங்கோட்டை சிவன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில்களில் நேற்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பாளையங்கோட்டை சிவன் கோவில், குறுக்குத்துறை முருகன் கோவில்களில் நேற்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவன் கோவில்
பாளையங்கோட்டை கோமதி அம்மாள் சமேத திரிபுராந்தீஸ்வரர் கோவில் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடைபெறும்.
இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
அதை தொடர்ந்து ரத வீதிகளில் கொடி ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரம் அருகில் சுவாமி -அம்பாள் எழுந்தருள பூஜைகள் நடைபெற்றது. அங்கு கொடிமரத்திற்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து கொடி ஏற்றப்பட்டது. பிறகு கொடி மரம், சுவாமி -அம்பாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 2-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
குறுக்குத்துறை முருகன்
இதேபோல் நெல்லை குறுக்குத்துறை முருகன் கோவிலிலும் நேற்று சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கும்பாபிஷேக பணிக்காக, பாலாலயம் செய்யப்பட்டு உள்ளதால், நேற்றைய விழா உள் திருவிழாவாக நடைபெற்றது. தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. வருகிற 30-ந்தேதி காலையில் உருகு சட்டமும், சண்முகார்ச்சனையும் நடக்கிறது. விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகள், பூஜைகள் நடைபெறுகின்றன.