தூத்துக்குடி மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டம்: கலெக்டர்

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற திட்டமிடப்பட்டு உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-02-23 18:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள கருவேலமரங்களை அகற்ற செயல் திட்டம் தயாரிக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.

குறைதீர்க்கும் நாள்

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி உதவி கலெக்டர் கவுரவ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை இணை இயக்குநர் பழனிவேலாயுதம் வரவேற்று பேசினார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினர்.

பன்றி தொல்லை

அப்போது அவர்கள் கூறியதாவது:- 2021- 2022-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு திட்ட இழப்பீடு முழுமையாக கிடைக்கவில்லை. ஏக்கருக்கு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை செலவு செய்து உள்ளோம். ஆனால், ரூ.1500 முதல் ரூ.2 ஆயிரம் மட்டுமே இழப்பீடு வந்து உள்ளது. எனவே, விவசாயிகளுக்கு முழுமையான இழப்பீடு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சாதாரண சிறிய விவசாயிகளும் பயன்பெறும் வகையில் குறைந்த திறன் கொண்ட மோட்டார் பம்ப் அமைக்கும் விவசாயிகளுக்கும் மானியம் வழங்க வேண்டும்.

2022- 23 ராபி பருவத்தில் மழை இல்லாததால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, முறையாக ஆய்வு செய்து விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் மகசூல் கணக்கெடுப்பில் விவசாயிகளின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகளால் விவசாய பயிர்கள் அதிகளவில் சேதமடைந்து உள்ளன. எனவே, பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

நடவடிக்கை

விவசாயிகளின் கோரிக்கைக்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பனங்கருப்படி, கற்கண்டு மற்றும் பனை பொருட்கள் தயாரிப்பு தொழில் செய்ய விரும்புவோருக்கு பிரதம மந்திரி குறு, சிறு, நடுத்தர தொழில்கள் கடனுதவி திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் வரை 35 சதவீத மானியத்தில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். குறைந்த திறன் கொண்ட மோட்டார் பொருத்தினாலும் மானியம் வழங்குவதற்கு உரிய பரிந்துரை செய்யப்படும். பயிர் காப்பீடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வறட்சி நிவாரணம் அறிவிப்பது தொடர்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

கருவேல மரம்

பன்றிகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்படுவதை தடுப்பது தொடர்பாக ஏற்கனவே அதிகாரிகள் அளவில் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. அவைகளை ஒழிக்க முதலில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கண்மாய்கள், நீர்நிலைகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கான செயல்திட்டத்தை ஒரு மாதத்துக்குள் தயாரிக்க வேண்டும். அவ்வாறு செயல்திட்டம் வகுத்தால் தான், அடுத்த நிதியாண்டில் உரிய நிதி ஒதுக்கீட்டை பெற்று வரும் ஏப்ரல், மே மாதங்களில் சீமைக்கருவேல மரங்களை அகற்ற முடியும். முதலில் வனத்துறை மூலம் சீமைக்கருவேல மரங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். அதிக மதிப்பு இருந்தால் ஏலம் விட வேண்டும். இல்லையெனில் ஊராட்சிகள் மூலம் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் அகற்ற வேண்டும். சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டால் பன்றிகளை பிடிப்பது எளிதாக இருக்கும். இந்த பணிக்கு விவசாயிகளும், விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் உதவி கலெக்டர்கள் புகாரி (திருச்செந்தூர்), மகாலட்சுமி (கோவில்பட்டி), தாமிரபரணி வடிநில கோட்ட செயற்பொறியாளர் மாரியப்பன், கோரம்பள்ளம் வடிநில கோட்ட செயற்பொறியாளர் முத்துராணி, கூட்டுறவு இணைப் பதிவாளர் முத்துக்குமாரசாமி, உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) நாச்சியார் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்